மாநில கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க தொடங்கி இருப்பது, எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி திட்டத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியை தொடர்ந்து கர்நாடகாவை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், பாஜக உடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் திட்டம்..!
கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து, பாஜகவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகின்றன. இதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர், நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மம்தா பானர்ஜி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் பலரும் மெகாக்கூட்டணிக்கு ஆதரவாகவே தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை இந்த மெகாக்கூட்டணி அமைந்தால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலின் முடிவில் பெரும் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி?:
இந்த நிலையில், தேசிய அரசியலில் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்து வருகின்றன. அண்மையில் கார்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் அபார வெற்று பெற பாஜக ஆட்சியை இழந்தது. இதனிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இதுவரை இல்லாத அளவிலான மோசமான தோல்வியை சந்தித்தது. 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், அந்த கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பாஜகவை ஆதரித்த தேவகவுடா:
இதை உணர்த்தும் விதமாக தான், அண்மையில் நடந்த ஒடிசா ரயில் விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தின. ஆனால், தேவவுடா மட்டும் “நடந்த சேதத்தை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் எடுத்துள்ளார். அவர் அயராது உழைத்து வருகிறார். விசாரணையை முடிக்கட்டும். அமைச்சர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ள நிலையில் அவரை ராஜினாமா செய்யக் கோருவது புத்திசாலித்தனம் அல்ல” என குறிப்பிட்டு இருந்தார். இதனால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் பாஜகவிற்கு சாதகமான முடிவை எடுக்கும் என கருதப்படுகிறது.
அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு:
முன்னதாக ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதாக கூறி, ஆளும் பாஜக கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகு தேசம் கட்சி தான் முதலாவதாக வெளியேறியது. அதைதொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தது. ஆனால், அண்மை காலமாக பாஜக உடன் சந்திரபாபு நாயுடு நெருக்கம் காட்டி வருகிறார். அண்மையில் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, பாஜக உடன் கூட்டணி அமைக்க தங்களது கோரிக்கை என்ன என்பதை சந்திரபாபு நாயுடு விளக்கியதாக கூறப்படுகிறது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால், நாடாளும்ன்ற தேர்தலில் பாஜக உடன் தெலுகு தேசம் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கூட்டணி முயற்சி தோல்வியா?
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்கொள்ளும் என கருதப்பட்ட நிலையில், முக்கிய மாநில கட்சிகள் பாஜக பக்கம் சாய்வது கூட்டணி திட்டத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம், கூட்டணி தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.