ஒடிசா ரயில் விபத்து உலகையே அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழத்தியது. கடந்த 20 ஆண்டுகளில் மிக மோசமான ரயில் விபத்தாக இந்த ரயில் விபத்து கருதப்படுகிறது. 288 பேரின் உயிரை பலி வாங்கிய இந்த ரயில் விபத்து பல்வேறு நபர்களின் வாழ்வில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகை சென்றடைய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கணவர் இறந்ததாக நாடகமாடிய பெண்:


இந்த சூழலில், உதவி தொகை பெறுவதற்காக தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக ஒரு பெண் நாடகமாடி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக பொய் சொல்லிய அந்த பெண் தற்போது வசமாக சிக்கியுள்ளார். கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்த கீதாஞ்சலி தத்தா, தனது கணவர் விஜய் தத்தா ஜூன் 2 ஆம் தேதி விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறி, ஒரு உடலை தனது கணவருடையது என்றும் அடையாளம் காட்டியுள்ளார்.


ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், கீதாஞ்சலி சொன்னது பொய் எனத் தெரியவந்தது. போலீசார் எச்சரித்து அவரை விடுவித்த போதிலும், அவரது கணவர் மணியபந்த காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவர் வசமாக மாட்டி கொண்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு பயந்து அந்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளார்.


காவல் நிலையத்தில் கணவரே புகார் அளித்ததால் அதிர்ச்சி:


இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். அரசு பணத்தை அபகரிக்க முயன்றதற்காகவும், தான் இறந்துவிட்டதாக பொய் சொன்னதற்காகவும் கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து மணியபண்டா காவல் நிலைய பொறுப்பாளர் பசந்த்குமார் சத்பதி கூறுகையில், "பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததால் கீதாஞ்சலியின் கணவரிடம் அங்கு புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்" என்றார்.


இதற்கிடையில், ஒடிசா தலைமைச் செயலாளர் பி.கே. ஜெனா இதுகுறித்து பேசுகையில், "இறந்ததாக பொய் சொல்லி உதவி தொகை பெற முயற்சி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே மற்றும் ஒடிசா காவல்துறையினரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 5 லட்சம் ரூபாய் உதவி தொகை அறிவித்துள்ளார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தனியாக அறிவித்துள்ளது.