தொலைதொடர்பு துறையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு, 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றைகளை ஒதுக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஈக்விட்டி இன்ஃப்யூசன் மூலம் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெறும் எனவும், இதன் மூலம் பிஎஸ் என் எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட திட்டம்:
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட 89 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி,
- இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கு இணைப்பை வழங்குவதில் கவனம் செலுத்தும் நிலையான தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக BSNL உருமாறும்.
- அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5 ஜி சேவைகளை வழங்கும்
- பல்வேறு இணைப்புத் திட்டங்களின் கீழ் கிராமப்புற மற்றும் குக்கிராமங்களில் கூட 4G சேவை வழங்க திட்டம்
- அதிவேக இணைய சேவைக்கான நிலையான வயர்லெஸ் அணுகல் (FWA) சேவைகளை வழங்க முடியும்
பிஎஸ்என்எல்-லுக்கு தொடரும் ஆதரவு:
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்க சிறப்பு நிதியை ஒதுக்குவது இது முதல்முறையல்ல. தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களை அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற 4G மற்றும் 5G சேவைகளை வழங்குவதற்காக BSNL நிறுவனத்திற்காக சிறப்பு தொகுப்பை கடந்தாண்டு ஜூலை மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்த தொகுப்பு சேவைகளின் முன்னேற்றம் மற்றும் அதன் தரம், BSNL இன் இருப்புநிலை மற்றும் BSNL இன் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
பிஎஸ் என் எல் நிறுவனத்தை மேம்படுத்த கடந்த 2019ம் ஆண்டு 69 ஆயிரம் கோடி ரூபாயையும், 2022ம் ஆண்டு 1.64 லட்சம் கோடி அளவுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிற திட்டங்கள்:
- காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- துவரம் பருப்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
- நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது.
- பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது. நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6.620 ஆக உயர்ந்துள்ளது.
- சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.