கேரளாவில் உள்ள கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பயிற்சி எடுப்பதை தடுக்கும் பழைய உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு தடை:
கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கேரளாவில் கோயில்களை ஆயுதக் கிடங்காக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாகவும், இது தொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து கோயில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பயிற்சி எடுப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மாநில பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாநில பாஜக தலைவர் கும்மனோம் ராஜசேகரன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி பெற்ற பின்னரே ஆயுத பயிற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையின் நோக்கம் கோயில் வளாகங்களை இடதுசாரி கொள்கைகள் கொண்ட இடமாக மாற்றுவது தான் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு:
இதனைத் தொடர்ந்து மீண்டும் 2021 ஆம் ஆண்டும் இதேபோன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பயிற்சி எடுப்பதை தடை விதிக்கப்பட்ட முந்தைய உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்த அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்படும் ஊர்வலங்கள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு அறிவுறுத்தியும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவதை தொடர்ந்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.