இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்திய நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் தரம் பற்றி கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் இது தொடர்பான அறிக்கையில், ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஆய்வகங்களில் சோதனை செய்து அனுமதி சான்றிதழ் வழங்கிய பின்னரே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என்றும் இது ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குறிப்பிடத்தக்க ஆய்வகங்கங்களுடன் - இந்திய மருந்தியல் ஆணையம், பிராந்திய மருந்து சோதனை ஆய்வகம் (RDTL - சண்டிகர்), மத்திய மருந்து ஆய்வுக்கூடம் (CDL - கொல்கத்தா), மத்திய மருந்து சோதனை ஆய்வகம் (CDTL - சென்னை ஹைதராபாத், மும்பை), RDTL (குவஹாத்தி) மற்றும் NABL ஆகிய மாநில அரசுகளின் ஆய்வகங்களிலும் மருந்து பரிசோதிக்கப்படும். அதற்கான அங்கீகாரம் அந்த ஆய்வகங்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்தின் தரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில், தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்ட குளோபல் பார்மா ஹெல்த்கேர் அந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளை முழுவதுமாக திரும்பப்பெற்றது. அதற்கு முன், கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துதான் காரணம் என கூறப்பட்டது. இது போன்ற சூழலில் தற்போது இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்துத் துறையானது உலகெங்கிலும் மருத்துவப் பொருட்களின் முக்கிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக விளங்குகிறது. மிகவும் வளர்ந்த நாடுகளில் இருந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் வரை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. உலகளவில் ஜெனரிக் மருந்துகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. அமெரிக்காவில் பொதுவான தேவையில் 40 சதவீதத்திற்கும், இங்கிலாந்தில் உள்ள அனைத்து மருந்துகளிலும் சுமார் 25 சதவீதமும் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் சுமார் 3,000 மருந்து நிறுவனங்களும், 10,500 உற்பத்தி ஆலைகளும் உள்ளது. இது உலக அளவில் உயர்தர மருந்துகளை மலிவு விலையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. மேலும் மருந்து ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடம் பிடித்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.