இந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கடந்தாண்டு மத்திய அரசாங்கம் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரான ரத்தன் டாடாவின் டாடா குழுமத்திடம் விற்பனை செய்தது.


இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் (இன்று) ஜனவரி 27-ந் தேதி ஒப்படைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைப்பதற்கு முன்பாக, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். பிரதமர் மோடி மற்றும் டாடா தலைவர் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை பிரதமர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.






பிரதமர் மோடி மற்றும் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் சந்திப்பிற்கு பிறகு, அனைத்து சம்பிரதாயங்கள் முடிந்துவிட்டன. ஏர் இந்தியா முதலீட்டு செயல்முறை மூடப்பட்டு, ஏர் இந்தியாவின் புதிய உரிமையாளரான டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகள் மாற்றப்பட்டுவிட்டதாகவும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலாளர்துஹின் காந்த் பாண்டே தகவல் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாவால் 1932ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஏர் இந்தியா தொடங்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் தனது சேவையை முதன்முதலில் இன்றைய பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து பாம்பே (இப்போது மும்பை)க்கு தொடங்கியது. பின்னர், அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது. பின்னர், 1939ம் ஆண்டு திருவனந்தபரம், டெல்லி, கொழும்பு, லாகூருக்கு இயக்கப்பட்டது.



1946ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பொது நிறுவனமாக டாடா மாற்றினார்.பின்னர், ஏர் இந்தியா நிறுவனம் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர், இரண்டு ஆண்டுகளில் கெய்ரோ, ஜெனிவா மற்றும் லண்டன் நகரங்களுக்கு மும்பையில் இருந்து விமானம் இயக்கப்பட்டது.


1953ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு அனைத்து விமான சேவைகளையும் அரசுடைமையாக்கியது. இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவைகளையும், ஏர் இந்தியா சர்வதேச விமான சேவைகளையும் வழங்கியது. 1994ம் ஆண்டு முதல் மீண்டும் தனியார் விமான சேவைகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், ஏர் இந்தியா சேவை பாதிப்பைச் சந்திக்க நேரிட்டது. பின்னர், இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா இணைக்கப்பட்டது. இருப்பினும் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக கடந்தாண்டு ஏர் இந்தியாவை மத்திய அரசு டாடா குழுமத்திடமே விற்பனை செய்தது