காப்புரிமை சட்டத்தை மீறியதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குனர் சுனில் தர்ஷன் அளித்துள்ள புகாரின் பேரில், சுந்தர் பிச்சை மற்றும் வேறு நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 'ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா’ என்ற பாலிவுட் படம் வெளியானது. இதனை சுனில் தர்ஷன் இயக்கி, தயாரித்து இருந்தார். மேலும், இப்படத்தின் காப்புரிமையை அவர் யாருக்கும் தரவில்லை.
இந்நிலையில், இத்திரைப்படத்தை சட்டவிரோதமாக யூட்யூப் தளத்தில் மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். யூட்யூபில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், இன்னும் தளத்தில் இருந்து அப்படம் நீக்கப்படாமல் உள்ளது. இதனால், யூட்யூபில் பதிவேற்றம் செய்ய அங்கீகரிக்கப்படாத நபர்களை கூகுள் அனுமதித்ததாக இயக்குனர் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து இந்த வழக்கை விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திரைப்பட இயக்குனர் சுனில் தர்ஷன் தெரிவிக்கையில், “காப்புரிமை சட்டம் விதிமீறலை குறித்து கூகுள் நிறுவனத்திடம் முறையாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெல்லா ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் பிச்சை கரக்பூர் ஐஐடியில் உலோக பொறியியலில் பட்டம் பெற்றார். அதனையடுத்து அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்த சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனையடுத்து தன் உழைப்பாலும், திறமையாலும் அந்நிறுவனத்தின் சி.இ.ஓவாக தேர்வு செய்யப்பட்டார். 2015-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பணியாற்றி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்