இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தியை கேலி செய்துள்ளது பாஜக. ராகுல் காந்தி, நடை பயணத்தில் பங்கேற்கும் போது அணிந்திருந்த டி- சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி பாஜக விமர்சனம் மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், ராகுல் காந்திக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல், தனது ஆடைகளுக்குப் பணம் செலுத்த அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் யாத்திரையால் பாஜக அரண்டு போய் இருப்பதாகவும் காங்கிரஸ் தெரவித்துள்ளது.
ராகுல் காந்தி மற்றும் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலையைக் குறிப்பிடும் வகையில் இரண்டு புகைபடங்களை பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. புளூபெர்ரி டி-ஷர்ட்டின் விலை ₹41,257 என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பதிவுக்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ், "ஏய்... பயமா? இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து. பிரச்னை பற்றி பேசுங்கள். வேலையின்மை மற்றும் பணவீக்கம் பற்றி பேசுங்கள். நாம் ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், மோடி அணிந்திருக்கும் 10 லட்சம் ரூபாய் உடை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடிகள் பற்றி விவாதிக்க வேண்டும். பாஜக இதைப் பற்றி விவாதிக்க விரும்புகிறதா?" என பதிலடி அளித்துள்ளது.
“ராகுலின் ஆடைகளின் விலை எப்படிக் காட்டப்பட்டதோ, அதே போன்று மோடியின் ஆடைகளின் விலையையும் காட்ட வேண்டும். ஏனென்றால், ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் மக்களவை எம்.பி.க்கள். காந்தியின் விலையை நீங்கள் வெளியிடும்போது, மோடிக்கு ஏன் வெளியிடப்படவில்லை? ” என பயனர் ஒருவர் இந்தியில் குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட் சூட்டை பிரதமர் மோடி அணிந்ததாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, அணிந்திருந்த கோட் சூட்டின் ஒவ்வொரு பட்டையிலும் அவரது பெயர் எழுதப்பட்டிருந்தது. என்.ஆர்.ஐ-யும் தொழிலதிபருமான ரமேஷ்குமார் பிகாபாய் விரானி என்பவரிடமிருந்து மோடி இந்த உடையை பரிசாக பெற்றதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.