ஏர் இந்தியா நிறுவனம் 1932ம் ஆண்டு டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. இந்நிலையில் மத்திய அரசின் நிறுவனமாக செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் அதனை தனியாரிடம் விற்க மத்திய அரசு முனைப்புக்காட்டி வந்தது. அந்நிறுவனத்திற்கு இருந்த கடன் சிக்கல் காரணமாக யாரும் அதனை வாங்க முன்வரவில்லை. இந்நிலையில்  ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இதனையடுத்து டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிய செய்தியை  மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் அதனை ஆரம்பித்த டாடா நிறுவனத்திடமே செல்கிறது.


இதனையடுத்து  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1978ஆம்  ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடாவுக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்தப் பதிவில், 1953ஆவது ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடாவை  1978ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய மொரார்ஜி தேசாய் அரசு முன்னறிவிப்பின்றி அப்பொறுப்பிலிருந்து நீக்கியது என குறிப்பிட்டுள்ளார். அப்போது ஆட்சியை இழந்திருந்த இந்திரா காந்தி தன்னுடைய கையெழுத்தில் டாடாவுக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கு ஜே.ஆர்.டி. டாட்டா எழுதிய மறுமொழியையும் இணைப்பாக பதிவிட்டுள்ளார்.






இந்திரா காந்தி தன்னுடைய கடிதத்தில், நீங்கள் ஏர் இந்தியாவுடன் இனிமேல் இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. நீங்கள் வருத்தமாக இருப்பதைப் போலவே உங்களைப் பிரிந்து ஏர் இந்தியா நிறுவனமும் வருத்தத்தில் இருக்கும். நீங்கள் அந்த நிறுவனத்தின் தலைவராக மட்டும் இல்லை. நிறுவனராகவும், தனிப்பட்ட வகையில் ஆழமான அக்கறையுடன் அதை வளர்த்தவராகவும் இருந்தீர்கள். அலங்காரம் மற்றும் விமானப்பணி பெண்களின் சேலைகள் உள்ளிட்ட சிறியவற்றிற்குக் கூட  நுணுக்கமாக கவனம் அளித்ததுதான் ஏர் இந்தியா நிறுவனத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியது. உங்களைப் பற்றியும் ஏர் இந்தியா நிறுவனம் பற்றியும் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திருப்தியை உங்களிடம் இருந்து யாராலும் எடுக்க முடியாது. அரசு உங்களுக்கு பட்டிருக்கும் கடனை சிறுமைப்படுத்தவும் முடியாது. நம் இருவரிடையே சில தவறான புரிதல்கள் இருந்தன. நான் எந்தவிதமான அழுத்தத்தின் கீழ் செயல்பட வேண்டியிருந்தது மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்த எதிர்ப்புகள் ஆகியவற்றை என்னால் உங்களிடம் தெரிவிக்க முடியாது. நான் இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என எழுதியுள்ளார்.




இந்திரா காந்தியின் கடிதத்திற்கு மறுமொழி எழுதினார் ஜே.ஆர்.டி டாடா. அதில், “ஏர் இந்தியாவைக் கட்டமைப்பதில் என்னுடைய பங்கைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது நெகிழ்வாக இருந்தது. தனது சக  ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தந்த விசுவாசம், உற்சாகம் மற்றும் அரசு அளித்த ஆதரவு ஆகியவை இன்றி தம்மால் எதையும் சாதித்திருக்க முடியாது என பதில் எழுதப்பட்டுள்ளது.