நீதிபதிகள் மீது குற்றம் சொல்வது, அவர்களை மிரட்டுவது என்பஹு அண்மைக்காலமாக ஃபேஷன் ஆகிவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப்பிரதேசம் மற்றும் சென்னையில் இந்தப் போக்கு அதிகமாக இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்பிற்காக 15 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த வழக்கறிஞர் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய 15 நாட்கள் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. வழக்கறிஞர் நடந்து கொண்ட விதத்திற்கு இந்த 15 நாட்கள் சிறை தண்டனையே குறைவு தான் என்ற கருத்தையும் தெரிவித்தது.
ஒரு நீதிபதி எவ்வளவுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாக இருக்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் மீதான புகாரும் அதிகமாக இருக்கிறது என்று நீதிமன்றம் தனது பார்வையையும் முன்வைத்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் இது குறித்து கூறும்போது, "நாடு முழுவதுமே நீதிபதிகள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. அதுவும் மாவட்ட நீதிபதிகளுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லை. பல நேரங்களில் ஒற்றை காவலர் கூட மாவட நீதிபதிகளின் பாதுகாப்புக்கு இருப்பதில்லை.
வழக்கறிஞர்கள் நீதிக்கு மேலானவர்கள் அல்ல. தவறு செய்தால் அவர்களும் எல்லோரைப் போலவும் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளில் குறுக்கிட்டால் அது குற்றமே. அத்தகைய வழக்கறிஞர்கள் நீதித்துறைக்கு நிச்சயமாக அவமானச் சின்னம் தான். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள வழக்கறிஞர் நிச்சயமாக சகித்துக் கொள்ள முடியாதவராக செயல்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கறிஞர் மீது நீதிபதி ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கிறார். நீதிமன்ற அவமதிப்பிற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்படுகிறது. அவரோ அந்த வேளையில் ஐகோர்ட் வளாக டீக்கடையில் நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் அந்த வாரண்டை கொடுக்கவிடாமல் 100 வழக்கறிஞர்கள் தடுக்கின்றனர். இந்த சிசிடிவி காட்சிகளைக் கண்டோம். மிகுந்த வருத்தமளித்தது. அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஆஷா மீதே வழக்கறிஞர் விமர்சனங்களை முன்வைக்கிறார். மிரட்டல்களை விடுக்கிறார்.
எங்களைப் பொறுத்தவரை இத்தகைய செயல்களில் ஈடுபட்ட அவருக்கு இரண்டு வார சிறை என்பதே மிகவும் எளிமையான தண்டனை தான். சில நீதிமன்றங்களில், ஏன் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை வெளிப்படையாகவே மிரட்டும் போக்கு அதிகமாக இருக்கிறது" என்றார்.
அதுவும் குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பை நீதிமன்றம், தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உத்தரப் பிரதேச நீதிமன்றங்களில் நீதிபதிகளை மிராட்டும் தொனி அதிகமாகக் காணப்படுகிறது என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.