நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வார காலத்திற்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என  தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.


நடிகர் விவேக் மரணம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இன்னும் விடைகிடைக்காத நிலையில் மனித உரிமை ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 


முன்னதாக நீண்ட அழுத்தத்துக்குப் பிறகு நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை  தேசிய மனித உரிமை ஆணையம் சென்ற மாதம் விசாரணைக்கு ஏற்றது குறிப்பிடத்தக்கது.


நடப்பு வருடம் ஏப்ரல் 17-ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்த நிலையில் விவேக் இறப்பு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.





 விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் அனுப்பிய அந்த புகாரில், ‛நல்ல உடல்நலத்துடன் இருந்து வந்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு இறந்திருக்கிறார் என்றும்,  அதுகுறித்து  மத்திய அரசு விசாரணை நடத்த மத்திய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், தனது தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம். 


முன்னதாக, மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 17 காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய விவேக்கின் மரணத்தில் கொரோனா தடுப்பூசி சர்ச்சையும் எழுந்தது. இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தார். இது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்த நிலையில்  விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதற்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலர் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் நடிகர்கள் சிலர் அவர் தடுப்பூசியால்தான் இறந்தார் எனத் தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். இதையடுத்து செய்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.