நிலப்பிரபுத்துவ மனநிலையைக் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். முன்பைப்போல் நாடு முழுவதும் அதே இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்ற யதார்த்தத்தை ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தேசிய அளவில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைமை குறித்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி வளைந்து கொடுக்காமல் செயல்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.     


மேலும், "உத்தர பிரதேசத்தில் வாழ்ந்த ஜமின்தாரர்களைப் பற்றிய கதையை கூற விரும்புகிறேன்.  அவர்களிடம் பெரிய நில வளங்களும், கோட்டைகளும் இருந்தன.  நில உச்சவரம்பு சட்டத்திற்குப் பிறகு, அவர்களின் நிலங்கள் 15-20 ஏக்கராக சுருங்கியது. கோட்டைகளை பராமரிக்கும் திறன் கூட அவர்களிடம் இல்லை. 'பெரிய தோட்டம் இருந்தது.நாடு எங்களுடையது; கோட்டை எங்களுடையது; நிலங்கள்  எங்களுடையது என்ற நினைப்பில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இதே, நிலப்பிரபுத்துவ மனநிலையைத்தான் காங்கிரஸ் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார். 




ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்துள்ளது என விவரிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதுபோன்ற கதையாடல்கள் எடுபடப் போவதில்லை. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலங்களில் காங்கிரஸின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை. இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒத்தக் கருத்துடைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடியும்" என்று  தெரிவித்தார்.    


முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 19 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், நாடாளுமன்ற செயல்முறைகள் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நரேந்திர மோடி படுதோல்வி அடைந்துள்ளது.  விவசாயச் சட்டங்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அரசியலமைப்பு பிரதிநிதிகள், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்கள் ஒட்டுக் கேட்பு சம்பவங்கள், பணவீக்கம், கூட்டாட்சி அரசியல் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்புவதற்கான வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு மறுக்கப்பட்டது.  எதிர்க்கட்சிகள் அளித்த முழு ஒப்புதல் காரணமாகத்தான், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நிறைவேறியது. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றும், தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.   


மேலும், வாசிக்க:


இந்தியா-இங்கி., 5வது டெஸ்ட் ரத்து: இரு அணிகளும் இணைந்து ஒருமித்த முடிவு! காரணம் இது தான்!