வடகிழக்கு மாநிலங்களில் எழில் கொஞ்சும் இயற்கை கொடை பற்றி இன்னும் உள்நாட்டினருக்கே பலருக்கும் தெரியவில்லை. குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைக் குரல் கேட்காதோர் என்று கூறுவதுபோல் தான் ஐரோப்பா, ஆஸ்திரேலியா டூர் என்பார்கள் நம் வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை அழகை ருசிக்காதவர்கள். 


மேகலயா:


மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் வடகிழக்கு பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு கண்டுகளிக்க பசுமை நிறைந்த சுற்றுப்புறம், ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. யானை நீர்வீழ்ச்சி, ஷில்லாங் பீக், ஸ்வீட் ஃபால்ஸ், உமியம் ஏரி போன்ற பல முக்கிய இடங்கள் ஷில்லாங்கில் உள்ளது. இது கோடை காலத்திற்கு ஏற்ற அற்புதமான சுற்றுலா நகரமாகும்.


இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேகாலயா மாநிலம், அண்மைக்காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டில் 4,00,000 இருந்த சுற்றுலாப்பயணிகளின் வருகை எண்ணிக்கை, கடந்த 2017-ம் ஆண்டில் 10,00,000 அதிகரித்துள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில் மேகாலயாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தின் தனித்துவமிக்க இயற்கை அழகு, சுற்றுலா பயணிகள் குவிய முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அங்குள்ள ஏரிகள், மலைகள் நிறைந்த இயற்கை சூழல் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.


யானை நீர்வீழ்ச்சி: 


யானை நீர்வீழ்ச்சி ஷில்லாங்கின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் மேல் சில்லாங்கில் அமைந்துள்ளது. சில்லாங் நகர மையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சில்லாங் சிகரத்திற்கு மிக அருகில் ஒரு அறிவிப்புப் பலகை, மலையின் விளிம்பிற்கு மாறும் ஒரு சிறிய சாலையைக் குறிக்கிறது. இந்த சாலை வழியாக நீர்வீழ்ச்சிக்குச் செல்லலாம்.


நுழைவாயிலிலிருந்து, வீழ்ச்சியின் ஒவ்வொரு மட்டத்திற்கும் செல்ல முதல் மற்றும் இரண்டாம் நிலையில் ஓய்வெடுக்க வசதியாக இருக்கைகளும் படிக்கட்டுகளும் உள்ளன. இந்நீர்வீழ்ச்சியினை பார்வையிட 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்கக் கூடுதலாக 20 ரூபாய் செலுத்தவேண்டும்


ஷிலாங் பீக்:


ஷில்லாங் பீக்கில் இருந்து பார்த்தால் மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்திருக்கும். கடல்மட்டத்திலிருந்து 6449 அடி உயரத்தில் இருக்கிறது ஷில்லாங் பீக். இங்கிருந்து 360 டிகிரி பருந்துப் பார்வையில் இயற்கை அழகை ரசிக்கலாம். வங்கதேச ப்ளெயின்ஸைக் கூட காணலாம்.


உமியாம் ஏரி:


ஷில்லாங்கில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது உமியாம் ஏரி. கிழக்கு காசி மலைகளில் ஊசி இலைக் காடுகளின் ஊடே உள்ளது இந்த ஏரி. இதனை படா பானி என்றும் அழைக்கின்றனர். இங்கே காயக் படகு சவாரி, வாட்டர் சைக்கிளிங், ஸ்கூட்டிங் ஆகியனவும் இங்கே பிரபலம்.


டேவிட் ஸ்காட் ட்ரெயில்
 
ஷில்லாங்கில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த டேவிட் ஸ்காட் ட்ரெயில். 16 கிலோமீட்டர் நீளும் ஷில்லாங் ட்ரெயில். இதன் பெயர்க்காரணம் இதனை உருவாக்கிய பிரிட்டிஷ் நிர்வாகி டேவிட் ஸ்காட்.


டான் பாஸ்கோ மியூசியம்:


டான் பாஸ்கோ மியூசியம் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடம். இங்கே வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பழங்குடிகள் தயாரித்த கைவிணைப் பொருட்கள், கலைநயப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் இருக்கும்.