Airlines: விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சமீப காலமாகவே, விமானங்களில் தொடர்ந்து சர்ச்சை அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. 


பணிப்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்:


அதன் தொடர்ச்சியாக இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


பாங்காக் நகரில் இருந்து மும்பையை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்து. பல நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்து வந்த நிலையில், அதில் சவீடன் நாட்டைச் சேர்ந்தவர் மட்டும் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, சாப்பாடு கேட்டு தொந்தரவு செய்து நடுவானில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர், சக பயணியை தாக்கியதாக தெரிகிறது. அவர் கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனாஸ் (63) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. .


இதனைத்தொடந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது இண்டிகோ விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏரிக் ஹரால்டை அந்தேரி நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். விமானப் பணிப்பெண் மற்றும் சக ஊழியரிடன் தவறாக நடந்துக் கொண்ட வழக்கில், அந்தேரி நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை நேற்று சமர்ப்பித்தனர். இருந்தாலும், அவருக்கு நேற்றே ஜாமீன் வழங்கப்பட்டது. 


தொடர் சர்ச்சைகள்


கடந்த மூன்று மாதங்களில் மட்டும் விமானத்தில் தவறாக நடந்துக் கொண்டதாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் இருக்கைக்கு நடுவே இருந்த பகுதியில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் வாந்தி எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, கழிவறைக்கு அருகே அவர் மலம் கழித்திருத்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.


மேலும், அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மற்றொரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இருக்கையின் மேல் உள்ள கேபினில் தன்னுடைய கைப்பையை வைக்க உதவுமாறு அந்த பெண் பயணி, விமான பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், ஜனவரி 30ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.