Tamil News Headlines Today:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், மும்பை அணிக்கு ஆட்டத்தில் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொரோனா தொற்றுக்கான 4வது மாபெரும் தடுப்பூசி முகாம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 1,50,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,630 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,526 ஆக உயர்ந்துள்ளது.
பெருந்தொற்று, வெள்ளம், பண்டிகைகள், குளிர்காலம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துக்கள் மற்றும் அனைத்து சூழல்களையும் கருத்தில் கொண்டு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள், பல மாநிலங்களின் 30 சட்டப்பேரவை தொகுதிகளின் காலியிடங்ளை நிரப்புவதற்கான இடைத் தேர்தல்களை 30.10.2021 அன்று நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சராக பதவி வகித்து வந்த அமரீந்தர் சிங் அண்மையில் பதவி விலகியதைத் தொடர்ந்து சரண்ஜீத் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவியேற்றார். புதிதாக 15 பேர் அமைச்சர்களாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பதவியேற்றனர். இந்நிலையில் அவர்களுக்கான இலாக பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சித்து ராஜினாமா செய்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா 3வது அலையை தவிர்க்க இயலும் என்றும் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மூத்த குடிமக்களுக்கான நாட்டின் முதல் இலவச உதவி எண் : 14567 வெளியிடப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்களுக்குத் தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.