கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடந்த முக்கிய அரசியல்- சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
2. அஸ்ஸாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. முன்னதாக, நேற்று நடைபெற்ற பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
3. சென்னை மாநகராட்சி ஆணையராக மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசுத்துறை முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இப்பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். கொரோனா சிகிச்சைக்காக மேலும் 12 இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார் .
5. முன்னாள் ராணுவ டாக்டர்களை மீண்டும் தேர்வு செய்து பணியமர்த்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், " ராணுவத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுக்கு இடையே விடுவிக்கப்பட்டு, குறுகிய கால பிரிவு சேவையில் பணியாற்றிய மருத்துவர்கள் 400 பேரை மீண்டும் தேர்வு செய்து 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குனரகத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது
6. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
7. கோவிட்-19 தடுப்புப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கை மையத்திற்கான அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. இதன்படி, டாக்டர் தாரேஸ் அஹமத் இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றுக்கான தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதோடு, மருத்துவமனைகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்த மையம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. நேற்று, சென்னையில் மு.க ஸ்டாலின் தலைமையில் முதலாவது அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுவதை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள வசதிகள் மற்றும் சிகிச்சையை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
9. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,515 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 7,130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கோவிட்-19-னால் நேற்று 236 பேர் உயிரிழப்பு. இதன் மூலம், இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,648 ஆக அதிகரித்துள்ளது.