கொரோனா தொற்றின் 2-வது அலை குழந்தைகளை பெருமளவில் பாதிப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றின் 3-வது அலையினை சமாளிக்க முடியாத அளவில் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீப காலங்களாக 0 முதல் 19 வயதிலான குழந்தைகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில், தங்களது  வீட்டில் குட்டி தேவதை மற்றும் இளவரசர்களாக வலம் வரக்கூடிய குழந்தைகளை கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் குழந்தை நல மருத்துவர். இதுகுறித்து விரிவாக இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.


குடும்ப உறுப்பினர் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?


குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இருமல், சளி போன்ற வெளிப்படையான அறிகுறி இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா உறுதியாகும் பட்சத்தில் உடனடியாக பெற்றோர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, குழந்தைகளிடம் இருந்து தனித்து இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளை யாரிடமாவது குறித்து பராமரித்து கொள்ளலாம் அல்லது மாஸ்க் அணிவது மற்றும் கைகளை அடிக்கடி கழுவிக்கொண்டு குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்ள வேண்டும்.


குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்வது?


கொரோனா தொற்றின் பெரும்பாலும் காய்ச்சல், சளி அல்லது இருமலாக தான் இருக்கும் நிலையில், பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று இல்லாமல் குழந்தைகளுக்கு இதுப்போன்ற அறிகுறி தென்பட்டால், குரோசின் அல்லது பாராசிட்டமால் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருத்தினை குழந்தைகளுக்கு முதலில் வழங்க வேண்டும். தற்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் வருவதால் பயப்படத்தேவையில்லை. ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் குழந்தைகளுக்கு  கொரோனா பரிசோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.


குறிப்பாக தற்போது குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தான் அதிகளவிலான அறிகுறிகளாக உள்ளது என தெரிவிக்கும் குழந்தை நல மருத்துவர்கள், அரிதான அறிகுறியாக வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்படுகிறது. இதற்கு வழக்கமாக கொடுக்கும் மருந்துகளை கொடுக்கலாம், சரியாகாத பட்சத்தில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.



கொரோனா அறிகுறிகள் குறித்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது?


 குழந்தைகளுக்கு பெரும்பாலும் 2 முக்கியமான கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் போன்றவை வழக்கமான ஒன்து தான். ஆனால் கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் இருப்பின் உடனடியாக  மருத்துவமனை அழைத்துச்செல்ல வேண்டும்.  ஒரு குழந்தை கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு அல்லது குடும்பத்தில் யாருக்காவது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால் அதனை எச்சரிக்கையோடு கையாள வேண்டும். சொறி, காய்ச்சல், கண்களின் சிவத்தல், நாக்கு, கைகள் மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கவாஸாகி போன்ற நோய் அறிகுறி என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் அறிகுறிகள் மிகவும் ஆபத்தானது என்பதால் குழந்தையின் ஆரோக்கியத்தை குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து கண்காதித்து வரவும், கவாசகி போன்ற அறிகுறிகள் இருப்பின் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களின் உதவியை நாடுவது கட்டாயமான ஒன்று.



கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?


கொரோனா குழந்தைகளை பாதிக்காத வகையில் அவர்களுக்கு சத்தான உணவுகளை தர பெற்றோர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக வைட்டமின்கள் அதிகளவில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்த சிக்கலான காலக்கட்டத்தில் தேவையின்றி குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே குழந்தைகளுக்கு யோகா அல்லது லேசான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆன்லைன் வீடியோக்களின் மூலம் குழந்தைகளுக்கு கைவினைப்பொருட்கள் செய்வது போன்ற தனித்திறமைகளை ஊக்குவிக்க வேண்டும், மேலும் குழந்தைகளை மன ரீதியாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க உதவ முன்வர வேண்டும் எனவும் குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.