*தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,483 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,94,143 ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 49,055 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
*தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த, ஊரடங்கு நாட்களில், காய்கறிகள் வினியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 0 4 4 – 22253884 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
*தளர்வில்லா ஊரடங்கு காலத்தில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகர் சங்கத்துடன் இணைந்து பொது மக்களுக்கு நாள்தோறும் காய்கறி மற்றும் பழங்களை 200 வார்டுகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
*தமிழக மீனவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
*12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மே 25 ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் : மத்திய அரசு வேண்டுகோள்
*12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு உறுதி பட தெரிவித்துள்ளது.
*கொரோனா பரவலைத் தடுக்க புதுச்சேரியில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்த ரராஜன் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
*2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*டவ்-தே புயல் காரணமாக கடலில் காணாமல் போன மீனவர்கள் 16 பேர்கள் குறித்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை என முதல்வர் குற்றம் சாட்டினார்
*இந்தியாவில் 85 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
*இம்மாதம் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான காலத்திற்கு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22.17 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை கூடுதலாக ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
இது போன்ற அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள் www.abpnadu.com இணையதளத்துடன்.