தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடந்த  24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


*கோவேக்சின் தடுப்பூசியை தமிழ்நாட்டில்  தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.


*தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.


*ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு தெரிவித்தது. 7 ஆண்டுகாலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களின் சான்றிதழை மறு மதிப்பீடு செய்வது, புதிய சான்றிதழ்களை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.   



*இந்தியாவுக்கு 6 கோடி தடுப்பூசி  டோஸ்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க  துணை அதிபர் கமலா ஹாரிஸ் 
தெரிவித்தார்.  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். இதில் இரு நாடுகளின் உறவு மற்றும் தடுப்பூசி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


*2021 ஜூன் 2ம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இவற்றில் 93.3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது . மேலும், ஜூன் மாதத்தின் முதல் 2 வாரத்தில் தமிழகத்துக்கு 7.48 லட்சம் தடுப்பூசி டோஸ்களும்,  அடுத்த 2 வாரத்தில் (15 -31 வரை )  கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் மூலமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


பிரதமருடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்!


*இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.      



*கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். 


*இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21 இன் மூன்றாவது பதிப்பை நிதி ஆயோக் நேற்று வெளியிட்டது. அதில் சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் 75 புள்ளிகளுடன் கேரளம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு 2 வது இடத்தினையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நிதி ஆயோக் பட்டியில் தமிழ்நாடு 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Niti Aayog Developing State List: நிதி ஆயோக் மாநிலங்களின் வளர்ச்சி பட்டியலில் தொடர்ந்து கேரளம் முதலிடம்; தமிழகத்திற்கு 2-வது இடம்!