உத்தர பிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் உள்ள ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.


ராமர் கோயில் திறப்பு குறித்து உதயநிதி பேசியது என்ன?


மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.


முன்னதாக, ராமர் கோயில் திறப்பு குறித்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், "ராமர் கோயில் திறப்புக்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரானது அல்ல. மசூதியை இடித்துவிட்டு கோயிலை கட்டியதில்தான் உடன்பாடு இல்லை" என கூறியிருந்தார்.


எக்ஸ் வலைதள பக்கத்தில் பாஜக, இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியது. அதில், "இந்த அதர்மவாதிகளை அடையாளம் காணுங்கள்!
இவர்கள் ராமர் கோயிலை வெறுப்பவர்கள். சனாதன தர்மத்தை அவமதிப்பவர்கள்" என இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 






இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பதிந்த டி-ஷர்ட் அணிந்த தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு பாஜகவின் இந்த பதிவுக்கு உதயநிதி பதிலடி தந்துள்ளார்.


அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது.


அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பங்கேற்க மறுத்த காங்கிரஸ், "மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், அயோத்திகோயில் விவகாரத்தை ஆர்எஸ்எஸ்/பாஜக நீண்ட காலமாக அரசியலாக்கி வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே முழுமையடையாத கோயிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைக்கின்றனர்.


2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே,  சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என விளக்கம் அளித்தது.