ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். "ஆசிரியப் பணி என்பது ஏட்டுக் கல்வியைப் புகட்டுவது மட்டுமன்று. அது, மனிதர்களை - அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி; புனிதப்பணி" என  தமிழ்நாடு முதலமைச்சர் தனது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக  ஆலோசனை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரும் 6 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.


9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நியமித்தது. அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென எனவும் கேட்டுக் கொண்டது.    


News Headlines: ஆசிரியர் தின வாழ்த்து.. வேலூரில் வெள்ள அபாய எச்சரிக்கை - சில முக்கியச் செய்திகள்
 


சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 69,970 பேருக்கு கோவிட்19  தடுப்பூசிகள் செலுத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே பொன்னை அணைக்கட்டு மேற்குப்புற கால்வாயில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இ'டங்களில் தங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவகுண்டா அணையிலிருந்து சுமார் 4500 கன அடி திறந்துள்ளதைத் தொடர்ந்நு இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம் பொன்னை அணைக்கட்டிலிருந்து சுமார் 3,000 கன அடி நீர் தற்போது  வெளியேறுவதைத் தொடர்ந்து பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  


மேற்குவங்கத்தில் மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒடிஷாவில் ஒரு சட்டப் பேரவை தொகுதிக்கும் இம்மாதம் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  நாடாளுமன்ற தொகுதிகளில் 3 இடங்களும், பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களில் 32 இடங்களும் காலியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.  


இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக நகர்ந்தது. நேற்றைய,  மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர்: 270/3