இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


இந்தியா ஈன்றெடுத்த பிள்ளைகளில் தலைசிறந்தவர் அம்பேத்கர்:


அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியா ஈன்றெடுத்த பிள்ளைகளில் தலைசிறந்த மகன்களில் ஒருவராக திகழ்ந்தவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். சிறந்த தேசியத் தலைவராகவும், அறிவார்ந்த மாபெரும் ஆளுமையாகவும், தொலைநோக்கு பார்வையாளராகவும் இந்த மகத்தான தேசத்தை உருவாக்குவதற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர். 


சுதந்திரத்திற்குப் பிறகு, தேசத்திற்கு அவர் செய்த பங்களிப்புகள் துரதிர்ஷ்டவசமாக குறைத்து மதிப்பிடப்பட்டது. நம் சமூகத்தில் உள்ள சாதி அமைப்பை அழிப்பதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவரை நம் மக்கள் ஒரு சாதித் தலைவராக பார்த்தனர். 


திறமையாக எழுதப்பட்ட உலகின் மிக விரிவான ஆவணமான இந்திய அரசியலமைப்பை அம்பேத்கர்தான் உருவாக்கினார். நமது அரசியலமைப்பின் அழகு என்னவென்றால், அதன் உறுதியான கட்டமைப்பிற்குள், அது நெகிழ்வானதாகவும், எதிர்கால மாற்றங்களுக்குப் பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.


அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆச்சரியமானவை:


நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆச்சரியமானவை. எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்கின்றன. அவர் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்டவராக இருந்தார். அவர் காணாத நாளையை அரசியல் சட்டத்தில் இணைத்து கொண்டு வந்தார். அதைப் பார்க்க நமக்கு கண்கள் வேண்டும்.


மக்களுக்காக அதிகம் செய்துள்ளார். தேசிய சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​ஆங்கிலேயர்கள் போலிக் கோட்பாடுகளை முன்வைத்து சமூகத்தை பிளவுபடுத்த முயன்றனர். அவர்கள் திராவிட-ஆரிய இனக் கோட்பாட்டைக் கொண்டு வந்து அதை ஆதரித்தனர். வடக்கு கிழக்கில், அவர்கள் பொய்யான இனவாதத்தை ஊக்குவித்தனர். 


அவர்கள் மதத்தின் அடிப்படையில் பிரித்து, முஸ்லிம்களையும் இந்துக்களையும் வேறு வேறு என்றும், ஒன்றாக வாழ முடியாது என்றும் கூறி வங்காளத்தைப் பிரித்தார்கள். சமூகத்தை தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர்கள் என்று பிரித்து விளையாடினர்.


அவர்கள் வெற்றி பெற்றிருந்தால், இன்று இந்தியா எப்படி இருக்கும்? பூனா ஒப்பந்தத்தில் பிரிட்டிஷ் வடிவமைப்பிற்கு எதிராக மகாத்மா காந்தியுடன் நின்றவர் பாபாசாகேப். நமக்கு ஜாதி இல்லை, அனைவரும் குடும்பம் போல் வாழும் பாரதத்தை அவர் கனவு கண்டார். பாரதியாரின் பாரதத்தை (பல்ல கூட நல்ல நாடு) உருவாக்குவது பாபாசாகேப்பின் கனவாக இருந்தது.


அவரது 133வது பிறந்தநாளில், பாபாசாகேப் கனவு கண்ட நாட்டை உருவாக்க உறுதி ஏற்போம். மனிதகுலத்தின் நன்மைக்காக அனைத்து அம்சங்களிலும் உலகை வழிநடத்தும் இடத்தில் வலிமையான மற்றும் ஒன்றுபட்ட பாரதம் உள்ளது" என்றார்.