மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


சி.பி.ஐ. சம்மன்:


நாட்டின் தலைநகரான டெல்லியில் மிகப்பெரிய தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து 2013ம் ஆண்டு ஆம் ஆத்மி கடந்த சில ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த கொள்கை கொண்டு வரப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சி பல சர்ச்சைகளை சந்திக்க வேண்டியிருந்தது.


மதுபானக் கொள்கை முறைகேடு:


டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கடந்தாண்டு டெல்லியில் ஆளுநர் விகே சக்சேனா சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ. டெல்லி மற்றும் பஞ்சாபில் 20 இடங்களில் சோதனை நடந்தது.


இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் டெல்லியின் துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை டெல்லி அரசியலில் ஏற்படுத்தியது. விசாரணை நடைபெறுவதற்காக மணீஷ் சிசோடியா தன்னுடைய துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


என்ன விவகாரம்?


சிசோடியா பிணையில் வெளியில் வருவதற்காக தொடர்ந்து விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதே வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், மணிஷ் சிசோடியாவை போல அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.


டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 மதுபான கடைகளின் உரிமைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் ரூபாய் 2 ஆயிரத்து 800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானாவின் முதலமைச்சர் மகள் சந்திரசேகர்ராவின் மகள் கவிதாவிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.