கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.
18 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி:
ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்தி்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இதை தொடர்ந்து, அரசு பங்களாவை ராகுல் காந்தி இன்று காலி செய்தார். லாரி டிரக்கை கொண்டு அரசு பங்களாவில் இருந்த ராகுல் காந்தியின் பொருள்கள் எடுத்து செல்லப்பட்டது. 12 துக்ளக் லேனில் உள்ள இந்த பங்களாவில்தான் ராகுல் காந்தி கடந்த 2005ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார்.
அரசு பங்களாவை காலி செய்வதில் இருந்து நீட்டிப்பு கேட்டு நாடாளுமன்ற வீட்டுவசதி கமிட்டியிடம் ராகுல் காந்தி கடிதம் எழுதியிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி கடிதம் எழுதியிருக்கும் பட்சத்தில் நீட்டிப்புக்கு அளிக்கப்பட்டுள்ள காரணத்தை ஆராய்ந்து நீட்டிப்பு வழங்கலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவை அந்த கமிட்டி எடுத்திருக்கும்.
பாஜக எம்பி சி.ஆர். பாட்டீல் தலைமையிலான நாடாளுமன்ற வீட்டுவசதி கமிட்டியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இருக்கின்றனர். ஆனால், காலி செய்வதில் இருந்து நீட்டிப்பு கேட்காமல் அரசு பங்களாவை காலி செய்துள்ளார் ராகுல் காந்தி.
அவதூறு வழக்கு:
தற்போது, அவதூறு வழக்கில் ஜாமீனில் இருந்து வருகிறார் ராகுல் காந்தி. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம் தீரப்பை ஒத்திவைத்தது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி ராபின் மொகேரா, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி, இந்த வழக்கில் உத்தரவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேற்றைய விசாரணையின்போது வாதிட்ட வழக்கறிஞர் சீமா, "அவதூறு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே புகார் அளிக்க முடியும். எனவே, பூர்ணேஷ் மோடி புகார் அளிக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.
மோடி என்ற குடும்பப் பெயரை அவதூறு செய்யும் நோக்கம் பேச்சாளரிடம் இருந்ததா என்பதைக் கண்டறிய ராகுல் காந்தியின் உரையை சூழலுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சன ரீதியாக பேசியதன் விளைவு அன்றி வேறில்லை" என்றார்.