ஏபிபி குழுமத்தால் தொடங்கப்பட்ட தமிழின் முதல் டிஜிட்டல் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


மாநிலம் கடந்து நாடு கடந்து உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் முக்கிய கட்டுரைகளாக, செய்திகளாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளது.


ஏபிபி நாடுவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ஏபிபி நாடு, இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி.



இந்த தருணத்தில், ஏபிபி குழுமத்திற்கும் குறிப்பாக ஏபிபி நாடு குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் நீண்ட போற்றத்தக்க பயணத்திற்காகவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 



இந்த இரண்டு ஆண்டு காலத்தில், பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை பெற்று பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது ஏபிபி நாடு. ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் செழுமைப்படுத்துவதற்கும் பொறுப்பான சுதந்திரமான ஊடகம் அவசியம். தங்களின் சமூக மற்றும் தேச நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவது ஊடகத்திற்கு அவசியமான ஒன்று. 


தமிழ் மொழி ஒரு பழமையான மொழி. செழுமையான இலக்கிய வளத்தை கொண்டுள்ளது. 9 கோடி பெருமைமிகு பேச்சாளர்களை கொண்டுள்ளது. உண்மையை சொல்லபோனால் சர்வதேச மொழியாக உள்ளது. அது, இந்தியாவின் பெருமை. 


எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் தமிழ் கலாசாரம், ஆன்மீகம், இலக்கிய வளத்தை பறைசாற்றுவது மட்டும் இன்றி நெறி சார்ந்த இதழியிலில் ஏபிபி நாடு நிலையான உறுதியை பூண்டு இருக்கும் என நம்பிக்கை உள்ளது.


ஏபிபி நாடுவுக்கும் அதன் ஒட்டுமொத்த குழுவிற்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி. வாழ்க தமிழ். ஜெய்ஹிந்த்" என குறிப்பிட்டுள்ளார்.