கடந்த 24 மணி நேரத்தில் 11,109  நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியது.  


இந்தியாவில் நேற்று 44,998-ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் தினசரி பாதிப்பு 11,000 ஐ கடந்து பதிவாகியுள்ளது. தற்போது இந்தியாவில் xbb 1.16 மற்றும் ba2 வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு புதிய உச்சம் பதிவாகி வருகிறது. மொத்தமாக 49,622 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,16,583 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிககை 5,31,064 ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.70 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.19 சதவீதமாக உள்ளது.


இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 17,496 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் 3962, ஹரியானா – 2835, மகாராஷ்டிரா – 5700, தமிழ்நாடு – 2684, ஹிமாச்சல் – 2145, குஜராத் – 2087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 49,622 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2,21,725 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஐ.சி.எம்.ஆர் தரப்பில் சிகிச்சை வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிகுறிகள் மிகவும் குறைவாக இருந்தால் அதாவது லேசான காய்ச்சல் இருந்தால் வீட்டில் தனிமைபடுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு ஆண்டி பயோடிக் பயன்படுத்தக்கூடாது. மூச்சுத்திணறல், சுவாச நோய் தொற்று இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட உடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அளவு 30 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தேசிய தலைநகரான டெல்லியில் மருத்துவமனைகள், பாலி கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.