டெல்லியில் நடைபெற்ற விஷ்வகர்மா திட்ட தொடக்க நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியை,  தமிழகத்தைச் சேர்ந்த பழனிசாமி என்ற பயனாளர் ஒருவர் கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


விஷ்வகர்மா நிகழ்ச்சி:


மத்திய அரசின் முழு நிதி ஒதுக்கீட்டின் கீழ், பிஎம் விஷ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினத்தின் போது உரையாற்றி இருந்தார். சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை, தனது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெற்ற இதுதொடர்பான நிகழ்ச்சியில், பயனாளர் சிலருக்கு தனது கைகளாலேயே அடையாள அட்டையை  வழங்கி மகிழ்ந்தார்.


பிரதமரை கட்டி அணைத்த தமிழர்:


நிகழ்ச்சியின் போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீன் வலை தயாரிக்கும் தொழில் செய்யும் கே. பழனிவேல் என்பவருக்கு பிரதமர் அடையாள அட்டையை வழங்கினார். இதனை பெறுவதற்காக மேடைக்கு வந்த பழனிவேல், அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். அதோடு, உணர்ச்சிவசப்பட்ட அவர் பிரதமர் மோடியை கட்டி அணைக்க, பிரதமரும் பழனிவேலை கட்டிபிடித்து ஊக்கப்படுத்தினார். அப்போது மேடையில் இருந்த மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் கைதட்ட, ஒட்டுமொத்த அரங்கமே ஆரவாரம் செய்தது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






விஷ்வகர்மா திட்டம்:


பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய  விரும்பும் நபர்கள் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்யலாம். அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும்.  திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டு, தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும். எந்தவித பிணையுமின்றி முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக 5 சதவிகித வட்டியுடன்  ரூ.2 லட்சம் வரை கடனாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


யார் யார் இணையலாம்?


இந்த விஷ்வகர்மா திட்டத்தில் ”தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் இணையலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.