இன்று தொடங்கி அடுத்த 5 நாட்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்:


ஒட்டுமொத்த நாட்டிற்கான சட்டங்களை வகுக்கும் இடமாக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகள் உள்ளன. இங்கு மக்கள் பிரச்னை குறித்து விவாதித்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால் சட்டமாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜனவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பட்ஜெட் கூட்டத்தொடரும்,  மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நடைபெறுவது வழக்கம்.


சிறப்பு கூட்டத்தொடர்:


இந்நிலையில் தான் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பின்பு இது வழக்கமான கூட்டத் தொடர் தான் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நோக்கம் என்பது தொடர்பாகவும், நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடரால், பொதுமக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்தன. என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டன. தேர்தலை மையமாக கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் விவாதிக்கப்பட்டது.


நிகழ்ச்சி நிரல்: 


தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவின் விடுதலைக்குப் பின் அரசியல் நிர்ணய சபையாக இருந்ததில் இருந்து கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம், அதன் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை குறித்து முதல் நாளில் சிறப்பு விவாதம் நடைபெறும். அதனை தொடர்ந்து, ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதோடு, ஏற்கனாவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா மற்றும் அஞ்சல் அலுவலக மசோதா ஆகியவையும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் உண்மையான திட்டம்?


மேற்குறிப்பிடப்பட்ட மசோதாக்கள் மட்டுமின்றி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேலும் சில புதிய மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், நாட்டின் பெயரை இந்தியா என்பதில் இருந்து பாரதம் என மாற்றுவது மற்றும் மக்களவையிலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது போன்ற மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்கண்ட மசோதாக்களை வாக்கு வங்கிக்கான அஸ்திரங்களாக மத்திய அரசு பயன்படுத்தும் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் என்பதே கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.


எதிர்க்கட்சிகளின் திட்டம்:


 சனாதன தர்மத்துக்கு எதிரான சில எதிர்க்கட்சி பிரமுகர்களின் பேச்சுகள் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பின. அதற்கு பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்தார். சிறப்பு கூட்டத்தொடரிலும் இந்த சர்ச்சை எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'ஒரே நாடு ஒரே தேர்தல்' மற்றும் பாரதம் என பெயர் மாற்றும் விவகாரமும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் கலவரம், சீனா அத்துமீறல் ஆகிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற ஊழியர்களுக்கான புதிய சீருடையில் பாஜகவின் தேர்தல் சின்னமான 'தாமரை' படம் இடம்பெற்று இருப்பதற்கும்,  எதிர்க்கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.