ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இன்று 4ஆவது முறையாக பதவியேற்றுள்ளார். அம்மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


இந்தியா கூட்டணி தலைவர்களுடன் உதயநிதி:


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


 






திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான உதயநிதி பங்கேற்றார். விழா மேடைக்கு வந்த உதயநிதி, ராகுல் காந்தி, கார்கே, கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் ஆகியோரை நலம் விசாரித்து விட்டு அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அருகில் சென்று அமர்ந்தார். 


ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி அசத்தல்:


ஜம்மு காஷ்மீர், ஹரியானாவை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாாஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் வெற்றியை பதிவு செய்த போதிலும், ஜார்க்கண்டில் படுதோல்வி அடைந்துள்ளது.


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 56 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா இன்று நடந்தது. இதில், இந்தியா கூட்டணி தலைவர் பங்கேற்றனர்.


இதையும் படிக்க: Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்