வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் நடைபெற்றது.


ஐந்து மாநில தேர்தல் முடிவுகளால் INDIA கூட்டணியில் விரிசல்? 


ஐந்து மாநில தேர்தல் காரணமாக INDIA கூட்டணியின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், INDIA கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. ஏன் என்றால், INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கவில்லை. தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களிலும் தனித்தே களம் கண்டது. 


குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தபோதிலும், அக்கட்சிக்கு காங்கிரஸ் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.


இப்படிப்பட்ட சூழலில், டிசம்பர் 6ஆம் தேதி, INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், ஐக்கிய ஜனதா கட்சி தலைவரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தனர். இதனால், INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்:


இச்சூழலில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி, INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் முன்னெடுக்க வேண்டிய விவகாரங்களை குறித்து இந்த கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது. 


அதுமட்டும் இன்றி, வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது. 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதால் மாநில கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க INDIA கூட்டணியில் இடம்பெற்ற மாநில கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.


காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே வார்த்தை போர் நீடித்து வந்த நிலையில், மூத்த தலைவர்களின் தலையீட்டால் அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.