கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.


தேர்தலுக்கு தயாராகும் I.N.D.I.A கூட்டணி:


ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அகற்றும் நோக்கில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டபோதிலும், தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி வலுவாக உள்ளது.


தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிட உள்ளது என்பது பற்றி அறிவிப்பு வெளியாக உள்ளது. அரசியல் களம் சூடிபிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை திமுக தொடங்கியுள்ளது.


இந்த நிலையில், அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும் கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றும் திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஸ்கெட்ச் போட்டு தரும் திமுக தலைவர் ஸ்டாலின்:


இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், "நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள்! வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி!


#Election2024 வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!" என பதிவிட்டுள்ளார்.


 






அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் கணிசமான தொகுதிகள் உள்ளன.


கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளும் கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளும் உள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளே ஆட்சியில் உள்ளன. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்து வருகிறது. தென் மாநிலங்களில் பலவீனமாக இருக்கும் பாஜக, வரும் தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.