மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்த நிலையில் தான், மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரும் பதற்றம் நிலவி வருகிறது.  


சந்தேஷ்காலி வன்முறை:


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு எதிராக பாலியல் புகார்கள் வந்த நிலையில், மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா பொதுநல மனுவை தாக்கல் செய்தார். சந்தேஷ்காலி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், கடமை தவறியதற்காக மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா,அகஸ்டின் ஜார்ஜ் மசிஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் ஏன் உயர்நீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது?  ஏற்கனவே கொல்கத்தா உயர்நீதிமன்றம்  தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.


"சந்தேஷ்காலியும் மணிப்பூரும் ஒன்னா?"


இந்த விவகாரத்தில் இரட்டை விசாரணை இருக்கக் கூடாது. உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்த விஷயத்தின் தீவிரத்தை உயர்நீதிமன்றம் புரிந்துள்ளது. சிறப்பு புலானாய்வு  குழு விசாரணைக்கு உத்தரவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதை உயர் நீதிமன்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார்.  இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா, "கடந்த ஆண்டு மணிப்பூரில் வெடித்த வன்முறை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டது" என்று மனுதாரர் வாதிட்டார்.


இதற்கு பதிலளித்த  நீதிபதி பி.வி.நாகரத்னா, ”மணிப்பூரையும், சந்தேஷ்காலி விவகாரத்தையும் ஒப்பிட முடியாது. மணிப்பூரில் உள்ள சூழ்நிலையுடன் இதனை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம்" என்றார். 


சந்தேஷ்காலியில் நடப்பது என்ன?


மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மைக் கண்டறியும் குழு சந்தேஷ்காலிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், "சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியதாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக உறுதியாகியது" என்று தெரிவித்தது.  


அதனை தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தேசிய பட்டியலின ஆணையம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதில், பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டம் 338-ன் கீழ் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.