கடந்த ஆகஸ்ட் 31 அன்று, கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் கத்தாரின் இந்தியத் தூதரான தீபக் மிட்டல் தலிபான் அமைப்பின் மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாயுடன் சந்திப்பை மேற்கொண்டார். தலிபான் தலைவர் ஸ்டானிக்சாய் 1970களின் இறுதியிலும், 1980களின் தொடக்கத்திலும் ஆப்கான் ராணுவ அதிகாரியாக இந்தியாவில் பயிற்சி பெற்றவர்.
தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் எடுத்தவுடன் இந்தியாவுடனான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இது என இந்திய வெளியுறவுத் துறையின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், இந்தியத் தூதர் தீபக் மிட்டல், ஆப்கானிஸ்தான் நிலத்தை இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் இருந்தும், தீவிரவாதத்தை வளர்ப்பதில் இருந்தும் பாதுகாக்குமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை மீண்டும் தாய்நாட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்து வரவும், ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வர விரும்பினால் அவர்களை அனுமதிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.
கத்தாரில் நிறுவப்பட்டிருக்கும் தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவராக இருக்கும் தலிபான் அமைப்பின் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் இந்திய ராணுவத்துடன் பயிற்சி மேற்கொண்டவர். 1979 முதல் 1982 வரை, நவ்கானில் உள்ள ராணுவக் கல்லூரியில் படை வீரராகவும், டெஹ்ராடூனில் இந்திய ராணுவக் கல்லூரியில் அதிகாரியாகவும் பயிற்சி பெற்றவர்.
அவருடன் பயின்றவர்கள் ஸ்டானிக்சாய் மிகவும் அமைதியானவராக இருந்ததாகவும், அவர் தற்போது தலிபான்களுடன் இருப்பது அதிர்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டெஹ்ராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்குக் கடந்த 1948ஆம் ஆண்டு முதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்டானிக்சாயுடன் பயின்ற ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி சந்தீப் தாபர், “ஸ்டானிசாய் வேறொரு படையைச் சேர்ந்தவர், எனினும் நாங்கள் ஒன்றாகப் பயின்றோம். அவர் அனைவருடனும் நன்கு பழகினார் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கல் பெரும்பாலும் பேச மாட்டார்கள். ஸ்டானிக்சாய் தன்னுடைய கண்ணோட்டங்களை அதிரடியாக வெளிப்படுத்தவில்லை என்ற போதும், தன்னைத் தானே கண்டுணர்ந்து கொண்டிருந்தார்” என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம், ஸ்டானிக்சாய் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், தலிபான்கள் இந்தியாவுடன் நல்லுறவு பேண விரும்பியதாகவும், இந்தியாவுடனான தன்னுடைய தனிப்பட்ட உறவு குறித்தும் கூறியிருந்தார். ஆப்கானிஸ்தானில் பிறந்த ஸ்டானிக்சாய் சொந்த நாட்டில் அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்று, இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கிருந்து தேர்ச்சிபெற்ற அவர் அதன்பிறகு, ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பின் போது, அவர் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட்டார். இந்தக் கால கட்டத்தில் அவர் முழுமையாக அரசியல்மயப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் 2015ஆம் ஆண்டு, தோஹாவில் உள்ள தாலிபான் அரசியல் அலுவலகத்தில் தலைவராக நியமிக்கப்பட்டார்.