மாட்டுக்கறி சாப்பிடுவதை என்றைக்குமே மனிதர்களின் அடிப்படை உரிமையாகக் கருதமுடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஜாவேத் என்பவர் மாட்டுக்கறித் தடைச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டார் என்று கைது செய்யப்பட்ட வழக்கில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. இந்த வழக்கில் ஜாவேதுக்கு பிணையை மறுத்துள்ள நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான அமர்வு பின்வருமாறு சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. ‘அடிப்படை உரிமை என்பது மாட்டுக்கறி உண்பவர்களுக்கு மட்டுமல்ல, பசு மாட்டை வணங்குபவர்களை மற்றும் பொருளாதார ரீதியாக அதனை நம்பியிருப்பவர்களுக்கும் இந்த உரிமை பொருந்தும். அந்த வகையில் பார்த்தால் ஒரு உயிரைக் கொல்லும் உரிமையை விட அந்த உயிருக்கான வாழும் உரிமை மேலானது. அதன் அடிப்படையில் மாட்டுக்கறி சாப்பிடுவதை மனிதர்களின் அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. உங்கள் நாக்குக்கு சுவை தேவை என்பதற்காக ஒரு உயிரைக் கொல்லலாமா?. பசுமாடு என்பது மதத்தின் அடையாளம் அல்ல. அது இந்தியாவின் அடையாளம். நமது நாட்டின் அடையாளத்தை விட்டுக்கொடுத்தால் நாம் அந்நிய ஆதிக்கத்துக்கு பலியாவோம். அதனால்தான் நாம் அந்நியர்களுக்கு அடிமைகளானோம். ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் அப்படித்தான் தற்போது ஆக்கிரமித்துள்ளார்கள்.
பசுக்கள் இந்துக்களுக்கான அடையாளம் மட்டுமல்ல. பாபர், அக்பர், ஹுமாயுன் உட்பட ஐந்து முகலாய மன்னர்களின் ஆட்சியில் பசு வதை தடை செய்யப்பட்டிருந்தது. மைசூரு நவாப் அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார். மேலும் ஆக்சிஜனை சுவாசித்து அதே ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே உயிரினம் பசுதான் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது’ என நீதிபதி கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்த பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலஹாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.நீதிபதி சேகர் குமார் யாதவ் ஒருபடி மேலே போய் பசுக்களுக்கான அடிப்படை உரிமை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் அரசு மசோதா நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பசு செழிப்பாக இருந்தால் நாடு செழிப்பாக இருக்குமென்றும் அலகாபாத் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பல்வேறு நம்பிக்கைகள் உடையவர்கள் வசித்தாலும் இந்தியாவுக்கான அவர்களது எண்ணம் என்பது ஒன்றே ஒன்றுதான். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்வந்து இந்தியாவின் நம்பிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இல்லாத நிலையில் அது நாட்டை வலுவிழக்கச் செய்துவிடும். அரசு மாநிலம் எங்கும் கோசாலைகளை நிறுவியுள்ளது. ஆனால் அதில் பசுக்களை பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை. தனியார் கோசாலைகளும் பெயரளவிலேயே இயங்குகிறது என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
Also Read: மாறி மாறி அச்சுறுத்தும் கொரோனா : ம்யூ வேரியன்ட் என்றால் என்ன?