சட்டப்பேரவைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.


அண்மையில் தமிழக, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் என ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த இயந்திரங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த இந்த 5 மாநிலங்களிலும் ஏதேனும் வழக்குகள் தொடரப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அவை பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. 


சட்டவிதிகளின் படி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் தேர்தல் முடிந்த 45 நாட்களுக்கு இவ்வாறாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவரை தான் தோல்வியடைந்த வேட்பாளர் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க முடியும். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியே 100 நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தேர்தல் தோல்வி தொடர்பான மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகவில்லை. இதனைக் கருத்தில் கொண்டே இன்னமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையமோ இதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்த நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.




தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், "அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, உத்தர்காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு,  இவிஎம் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், 4.5 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துமே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க உத்தரவிட வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் குறைந்தது 4.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் தேவைப்படுகின்றன. தேர்தல் ஆணையம் வசம் தற்போது 3.2 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 3 லட்சம் விவிபேட் இயந்திரங்களும் மட்டுமே உள்ளன.


உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கால அவகாசத்தை நீட்டித்து புதிய உத்தரவைப் பிறப்பித்து விரைவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை 5 மாநிலங்களில் இருந்து விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளார்.