நவராத்திரை விழாவை முன்னிட்டு சமாதி அடைந்தால் ஞானம் அடையலாம் என இளைஞரை மூளைச்சலவை செய்த சாமியார்களை காவல்துறையினர் கைது செய்தனர். 


சுபம் கோஸ்வாமி என்ற இளைஞர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்திற்கு வெளியே தனக்காக ஒரு குடிசை கட்டி வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 


உத்தர பிரதேசம் லக்னோவில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபம் கோஸ்வாமி. இளைஞரான இவர், ஐந்து ஆண்டுகளாக கிராமத்துக்கு வெளியே காட்டுப் பகுதியில் குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு சில சாமியார்களுடன் பழக்கம் ஏற்பட்டது.






இதில், முன்னாலால், ஷிவ்கேஷ் தீட்சித் என்ற இரு சாமியார்கள், நவராத்திரி விழாவை முன்னிட்டு 7 அடி பள்ளத்தில் உயிருடன் சமாதி அடைந்தால் ஞானம் கிடைக்கும் என்று சுபம் கோஸ்வாமியை மூளைச் சலவை செய்துள்ளனர்.


இதை உண்மை என்று நம்பிய சுபம் கோஸ்வாமியும், அவரது தந்தை வினீத் கோஸ்வாமியும் 6 அடி பள்ளம் தோண்டினர். பின், சுபம் கோஸ்வாமி அந்தக் குழிக்குள் இறங்கியதும், மூவரும் சேர்ந்து அதை மூடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சமாதியை பார்த்தபோது அது மூங்கில் மற்றும் சேற்றால் மூடப்பட்டிருந்தது.


அதிரடியாக சமாதியை தோண்டி உள்ளே குதித்த காவல்துறையினர் சுபம் கோஸ்வாமியை மீட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சுபம் கோஸ்வாமி, வினீத் கோஸ்வாமி, சாமியார்கள் முன்னாலால், ஷிவ்கேஷ் தீட்சித் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோஸ்வாமி அங்கிருந்து சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.


கோஸ்வாமி உயிருடன் சமாதி அடையும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் பரவி வரும் வேகமாக பரவி நிலையில், இதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.