Taj Mahal: உலக அதிசயங்களின்ல் ஒன்றான தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் மழை வெள்ளத்தில் மூழ்கியது.
தாஜ்மஹாலுக்குள் ஒழுகும் தண்ணீர்:
ஆக்ராவில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருவதால், தாஜ்மஹால் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமும் மழையால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அதன் முக்கிய அடையாளமான குவிமாடம் வழியாக நீர் கசிவைக் கண்டுள்ளது. தாஜ்மஹால் வளாகத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இருப்பினும், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏஎஸ்ஐ) பிரதான குவிமாடம் பாதுகாப்பாக இருப்பதாகவும், கசிவு காரணமாக நீர் வழிந்திருக்கலாம், ஆனால் குவிமாடத்தில் சேதம் ஏதும் இல்லை என்றும் உறுதியளித்துள்ளது. ட்ரோன் கேமரா மூலம் குவிமாடத்தை ASI ஆய்வு செய்துள்ளது.
தொல்லியல்துறை சொல்வது என்ன?
இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்புத் தலைவர் ராஜ்குமார் படேல் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, “தாஜ்மஹாலின் பிரதான குவிமாடத்தில் கசிவு ஏற்பட்டதை நாங்கள் கண்டோம். அதன்பிறகு சோதனை செய்தபோது அது கசிவு காரணமாக இருந்தது. பிரதான குவிமாடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ட்ரோன் கேமரா மூலம் பிரதான குவிமாடத்தை சோதித்தோம். மேலும், கசிவு இடையிடையே உள்ளதா அல்லது தொடர்ச்சியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. .
பிரதான நினைவிடத்தில் ஈரப்பதம் காணப்பட்டது. குவிமாடத்தின் கற்களில் மயிரிழையில் விரிசல் ஏற்பட்டு, கசிவு ஏற்படலாம். நீர்த்துளிகள் விழும் இடம், தொடர்ந்து அதே நிலையில் உள்ளதா என்பதை கண்டறிய, சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், மழை நின்றவுடன், தேவையான பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என கூறினார்.
மழை வெள்ளத்தில் மூழ்கிய தோட்டம்:
தாஜ்மஹாலின் தோட்டங்களில் ஒன்று மழைக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கியதைக் காணக்கூடியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டு அதன் வீடியோக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
நகரத்தில் நிலவும் வானிலையால் பல வரலாற்றுத் தளங்கள் பாதிக்கப்பட்டன. மற்றொரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ஆக்ரா கோட்டையில் நீர் கசிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அக்பரால் கட்டப்பட்ட வரலாற்று நகரமான ஃபதேபூர் சிக்ரி, ஜுன்ஜுன் கா கட்டோரா, ராம்பாக், சிக்கந்த்ராவில் உள்ள அக்பரின் கல்லறை, மெஹ்தாப் பாக், சினி கா ரௌசா ஆகிய இடங்களும் மழையில் சேதமடைந்தன.
கொட்டி தீர்த்த கனமழை:
ஆக்ராவில் வியாழன் அன்று 151 மி.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த 80 ஆண்டுகளில் 24 மணி நேரத்தில் பதிவான மிக அதிகபட்ச மழையாகும். கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், மழையால் சில பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர் மழையால் ஆக்ராவின் ஆடம்பரமான பகுதிகள் கூட வெள்ளத்தில் மூழ்கின. மழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளையும் மூட ஆக்ரா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.