கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி, ஓய்வு பெற்ற கர்னல் மோகன் மாலிக் உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்த அவரது மகன் மும்பையில் உள்ள, லீலாவதி மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சென்ற வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல். இதனால் வழக்கத்தை விட பயணத்திற்கு அதிக நேரம் பிடித்தது.


இதனால், மாலிக்கின் மகன் அங்கு சென்ற இரு சக்கரவாகன ஓட்டுநர்களிடம், கார் வேகமாக செல்ல போக்குவரத்தை கொஞ்சம் எளிமைப்படுத்தி தருமாறு உதவி கோரியுள்ளார். ஆனால் எந்த வாகன ஓட்டியும் அவருக்கு உதவமுன்வரவில்லை.


ஒரு கட்டத்தில், ஸ்விகி ஊழியரான மிருணால் கிர்தாத் அவருக்கு உதவ முன்வந்தார். நிலைமையை பிறவாகன ஓட்டிகளிடம் எடுத்துச் சொல்லி, கார் வேகமாக போக போக்குவரத்தை எளிமைபடுத்திக் கொடுத்த அவர், விரைவாக மோகன் மாலிக்கை மருத்துவமனையிலும் கொண்டு சேர்த்தார். 






 


இது குறித்து ஓய்வு பெற்ற கர்னல் மோகன் மாலிக் கூறும் போது, “கடந்த வருடம் டிசம்பர் 25 ஆம் தேதி உடல்நலம் சரியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். என்னோட மகன் மும்பையில உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு என்னை கார்ல வேகமா கொண்டு போயிட்டு இருந்தான். ஆனா, கடுமையான போக்குவரத்து நெரிசலால எங்களோட கார் தடைப்பட்டு நின்னுட்டு இருந்திச்சு. 


உடனே என்னோட மகன் அங்க போன பைக் ஓட்டிகளிடம்  கார் வேகமா போறதுக்கு போக்குவரத்தை கிளியர் பண்ணி கொடுக்குமாறு உதவி கேட்டார். ஆனால் யாரும் நிக்கவில்லை. 


அப்ப அங்க வந்த சுவிக்கி ஊழியரான மிருணால் கிர்தாத் உடனடியான உதவ முன்வந்தாரு. காரின் முன்னாடி கத்திக்கிட்டே போயி வாகனங்களை வழிவிட செஞ்சாரு. அவரோட உதவியால ஒரு வழியா மருத்துவமனையை போய் சேர்ந்துட்டோம். மருத்துவமனைக்கு வந்த பின்னாடியும் மிருணால் கிர்தாத் அங்கிருந்த ஊழியர்கள்ட்ட என்னுடைய உடல்நிலை குறித்து சொல்லி வேகமாக எனக்கு சிகிச்சை கொடுக்கவும் உதவி செஞ்சாரு” என்று கூறியுள்ளார். 


 மேலும் பேசிய அவர், “ பல வார சிகிச்சைக்கு அப்புறமா இப்ப நான் நல்லா இருக்கேன். என்னோட வாழ்கையை அந்த சின்னப்பயன் மீட்டு கொடுத்துருக்கான். என்ன பொருத்தவரை அவர் ஒரு  “ மீட்பர்”. அவர் மட்டும் இல்ல அப்படின்னா என்னோட அன்புக்குறியவர்களுக்கு நான் திரும்ப கிடைச்சிருக்க மாட்டேன். அவருக்கும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் என்னோட நன்றி.” என்றார்.


இந்தக் கதையை ஸ்விகி நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.