ஒரு காலத்தில் உணவு என்பது வீட்டை சார்ந்தே இருக்கும். ஏதோ ஒரு நல்ல நாள், பெரிய நாள் அன்று குடும்பத்துடன் ஹோட்டல்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவர். கால மாற்றத்தில் தற்போது தங்களது மொபைல் போன் மூலம் ஒரே ஒரு க்ளிக் செய்தால்போது தங்களது விருப்பமான உணவு, தங்கள் கைகளில் தஞ்சமடையும்.  புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பிரியாணி கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. 


கூட்டத்தில் சிக்கி தவிர்க்க விருப்பமில்லாத மக்கள், ஆன்லைன் வாயிலாக உணவுகளை ஆர்டர் செய்து புத்தாண்டை கோலகமாக கொண்டாடினர்.  இந்தநிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ’ஸ்விகி’ இத்தனை தரப்பு மக்கள் இத்தனை வகையான உணவுகளை ஆர்டர் செய்ததாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதில், 31 டிசம்பர் 2022 புத்தாண்டு தினத்தன்று, ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனம் நாடுமுழுவதும் 3.5 லட்சம் பிரியாணியையும், 2.5 லட்சம் பீட்சாவையும் டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


இந்தியா முழுவதும் அதிகமான மக்கள் விருப்பப்படும் உணவுகளில் பிரியாணிதான் எப்போது முதலிடம். அந்த வகையில் ஹைதராபாத்தில் அதிகபட்சமாக 75.4% மக்கள் பிரியாணியை ஆர்டர் செய்ததாகவும், லக்னோ-14.2% மற்றும் கொல்கத்தா-10.4% ஆர்டர்கள் செய்ததாகவும் ஸ்விகி தெரிவித்துள்ளது. 






மேலும், ஸ்விகி மூலம் சனிக்கிழமை இரவு 7.29 மணிக்கு 1.65 லட்சம் பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ததாக தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் பிரியாணி விற்பனையாகும் உணவகங்களில் ஒன்றான பவார்ச்சி, 2021 புத்தாண்டு தினத்தன்று நிமிடத்திற்கு இரண்டு பிரியாணிகளை டெலிவரி செய்ததாகவும், டிசம்பர் 31, 2022 அன்று தேவையை பூர்த்தி செய்ய 15 டன் சுவையான உணவை தயாரித்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அன்றைய நாளில் மட்டும் 61,287 பீஸ்ஸாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், சனிக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டில் 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. மளிகை விநியோக தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் 2,757 டியூரெக்ஸ் ஆணுறைகள் வழங்கப்பட்டது, அதை மொத்தமாக "6969' ஆக உருவாக்க மேலும் 4,212 ஆர்டர் செய்யும்படி மக்களைக் ஸ்விகி கேட்டு கொண்டது. 






இதுகுறித்து ஸ்விகி சிஇஓ ஸ்ரீஹர்ஷா மஜெட்டி நேற்று மாலை வெளியிட்ட ட்வீட்டில், "பார்ட்டி ஏற்கனவே வேகமாகத் தொடங்கிவிட்டது - நாங்கள் ஏற்கனவே 1.3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளோம். எங்கள் உணவு டெலிவரி ஊழியர்கள் புத்தாண்டை மறக்க முடியாததாக மாற்றத் தயாராகிவிட்டனர்” என்று தெரிவித்தார். 


இதில் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான இந்திய மக்கள் வெறுக்கும் கிச்சடியை இந்தியா முழுவதும் சுமார் 12,344 பேர் புத்தாண்டு இரவு அன்று ஆர்டர் செய்துள்ளனர். 


கடந்த 2022 ம் ஆண்டு ஸ்விகி மற்றும் ஜொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. அதேபோல், இந்திய மக்களால் அதிகம் உண்ணப்பட்ட உணவாகும் பிரியாணிதான் டாப்.