இந்தியாவில் உள்ள உணவு விநியோக தளங்களில் அதிகப்படியான பயனர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் ஸ்விக்கி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் இன்று சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதனால், ஸ்விக்கிற்கு பெரும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இது ட்விட்டரில்  ஸ்விக்கி நிறுவனம் இந்துபோபியாவில் ஈடுபடுகிறது என தெரிவித்துள்ளது. அதாவது இந்து மதத்தின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தினை செய்கிறது என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  


சர்ச்சைக்குரிய விளம்பரம்:


குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்விக்கி விளம்பரத்தில், “விளம்பரப் பலகையில் முட்டைகளின் படம்  இடம்பெற்று அதில், “ஆம்லெட்; சன்னி சைட்-அப் (ஆஃப் பாயில்) எனவும்,  இன்ஸ்டாமார்ட்டில் ஹோலி அத்தியாவசியப் பொருட்களைப் பெறுங்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அந்த விளம்பரப் பலகையில் ”முட்டைகளை உண்பதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஒருவரின் தலையில் அடித்து நொறுக்கக் கூடாது என்றும்” அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் இந்த விளம்பரம் அதிகப்படியான எதிர்ப்பினைச் சம்பாதித்துள்ளது. 


அதிலும் குறிப்பாக இந்த விளம்பரத்தினை கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டவர்கள் ஹேஸ்டேக் HinduPhobicSwiggy என்பதை அதிகப்படியாக பகிர்ந்தும், ரீ-ட்வீட்  செய்தும் வைரலாக்கி வருகின்றனர். ஸ்விக்கியின் இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பயனர் ஒருவர், ஸ்விக்கியை டேக் செய்து, “ஈத் பண்டிகையின் போது முஸ்லீம்கள் ஆடுகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கிறிஸ்துமஸ் சமயத்தில் மரங்களை வெட்டக் கூடாது என்று கிறிஸ்தவர்களை வலியுறுத்தும் படியான விளம்பரப் பலகையை நீங்கள் வைத்தீர்களா? உங்கள் இந்து வெறுப்பு பிரச்சாரத்தினை  எங்கள் பண்டிகைகளில் இருந்து விலக்கி, நாங்கள் விரும்பும் விதத்தில் ஹோலியை கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார். 


ஹோலி பண்டிகைக்கு எதிரானதா?


மற்றொரு பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்விக்கி நிறுவனத்தின் விளம்பரத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் ஹோலி கொண்டாடும் மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அது அமைந்துள்ளது. ஸ்விக்கி விளம்பரத்தை அகற்றி, இந்துக்களிடம் நேர்மையான மன்னிப்பை அந்நிறுவனம் கேட்பதன் மூலம் தான் இதனை சரி செய்ய  சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.  எங்கள் பண்டிகைகளில் மற்றவர்களின் கருத்தினை  நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்."


சில ட்விட்டர் பயனர்கள் சமீபத்திய ஸ்விக்கி விளம்பர பிரச்சாரத்தால் கோபமடைந்தாலும், மற்றவர்கள் இது பாதிப்பில்லாத பிரச்சாரம் என்று கூறினார். ஒரு பயனர் எழுதினார், "நான் உண்மையிலேயே ஆர்வமாக உள்ளேன். ஒருவரின் தலையில் முட்டையை உடைப்பது ஹோலியின் ஒரு அங்கமா? விளம்பரத்தில், ஹோலிக்காக ஒருவரின் தலையில் முட்டைகளை உடைக்க வேண்டாம் என்று ஸ்விக்கி மக்களைக் கேட்பது போல் தெரிகிறது. இது நல்லது தானே, இதில் என்ன தவறு இருக்கிறது? 


மற்றொரு பயனர் ட்வீட் செய்துள்ளார், “இது ஸ்விக்கியின் அழகான விளம்பரம். முட்டை என்பது ஒருவரின் தலையில் வீசப்படுவதை விட சாப்பிட வேண்டிய ஒரு பொருளாகும். ஹோலி விளையாட வேண்டாம் என்று அவர்கள்  அந்த விளம்பரத்தில் கூறவில்லை,  வண்ணங்களுடன் விளையாடுங்கள், ஹோலி அத்தியாவசியப் பொருட்களையும் ஸ்விக்கி  வழங்குகிறார்கள். நேர்மறையான விளம்பரம் ” என குறிப்பிட்டுள்ளார். 


சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், ஸ்விக்கி தனது தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,