தற்போது பரவி வரும் எச்3என்2 வைரஸ், ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தான் என்றும் இணை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எய்ம்ஸ்-டெல்லியின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா, எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்துப் பேசுகையில், "இந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நீர் மற்றும் வைரஸ் மாறுபாடின் காரணமாக இந்த நோய் பரவி வருகிறது. பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இணை நோய் இருப்பவர்கள், முதியவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.
வைரஸின் அறிகுறிகள்:
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய டாக்டர் ரந்தீப் குலேரியா, காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல்வலி மற்றும் சளி ஆகிய அறிகுறிகளுடன் இந்த வைரஸ் பரவி வருகிறது என்றும் வைரஸ் மாறுபாட்டின் காரணத்தால் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது இதனால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். "எச்1என்1 காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு நோய்தொற்று ஏற்பட்டது. அந்த வைரஸின் மாறுபாடு இப்போது எச்3என்2 ஆக உள்ளது, இது ஒரு சாதாரண இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்தான். ஆனால் வைரஸ் தோற்றத்தில் மாற்றமடைவதால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என கூறியுள்ளார்.
இந்த வைரஸ் ஆண்டுதோறும் சற்று மாறுபடும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நோய்த்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டாலும், பெரும்பாலானோர் வீட்டிலேயே மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வானிலை மாற்றம் ஏற்படுவதாலும், கூட்டத்தில் மக்கள் முகக்கவசம் அணியாததாலும் இந்த வைரஸ் அதிகம் பரவி வருகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தடுப்பு நடவடிக்கைகள்:
இந்த வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வெறும் கைகளால் கண்கள அல்லது முகத்தை தொடக்கூடாது. அதிக கூட்டம் இருக்கும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக இணை நோய் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மக்கள் கொண்டாட்டத்தின்போது கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிகை நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.