திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரகப் பார்சல் சேவை வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் 15 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். கேரள மாநிலம் அட்டக்குளங்கர மகளிர் சிறையிலிருந்து அவர் இன்று காலை வெளியே வந்தார். ஸ்வப்னா சிறையில் இருந்து வெளியே வந்ததும் செய்தியாளர்களைச் சந்திப்பார்.அப்போது பல உண்மைகளை உலகத்துக்குச் சொல்லுவார் என அவரது அம்மா பிரபா கூறியிருந்த நிலையில் தற்போது ஸ்வப்னா வெளியே வந்துள்ளார். ஸ்வப்னா வெளியே வந்ததை அடுத்து ‘சிறையில் இருந்த களைப்பு நீங்கியதும் செய்தியாளர்களைச் சந்திப்பார்’ என பிரபா கூறியுள்ளார்.
கேரளாவின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான விமான நிலைய பார்சல் சர்வீஸ் வழியாக தங்கம் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயிலிருந்து திருவனந்தபுரம் வந்த பார்சலில் சுமார் 30 கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டது.இதையடுத்து பார்சல் உரிமையாளரான ஷரித் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து கேரள தலைமைச் செயலகத்திலிருந்து வந்த அழைப்பில் தங்கத்தை விடுவிக்கும்படி உத்தரவிடப்பட்டது. போன் செய்தவர் அரசின் ஐ.டி. பிரிவைச் சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ்.
முதல்வர் பினராயி விஜயனின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் ஐ.டி. பிரிவிலிருந்து ஒரு நபர் கடத்தல் குற்ற வழக்கில் தொடர்பில் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் உதவியாளர் உட்பட பல இந்த வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. தீவிரவாத கும்பலுடன் தங்கக் கடத்தல் குழுவுக்குத் தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத்துறை முதல் சுங்கத்துறை வரை அனைத்து துறைகளும் போட்ட வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரியிருந்தார்.
கடந்த நவம்பர் 2ந்தேதி கேரள நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சாதாரண கடத்தல் வழக்கில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்வப்னா இதில் குற்றமற்றவர் என்றும் அவருக்கு இதில் தொடர்பிருப்பதாக எந்த வித சாட்சியமும் நிரூபிக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்வப்னா தற்போது 15 மாத சிறைக்காவலுக்குப் பின்பு வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியேறிய ஸ்வப்னாவை செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதில் அளிக்காமல் தனது அம்மாவுடன் கேரளா பலராமபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். இதையடுத்துதான் ஸ்வப்னாவின் தாய் பிரபா ஸ்வப்னாவுக்கு சிலநாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் அதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவார் என்றும் கூறினார்.