உணவுத் திருவிழா வழக்கம் தான். அதுவே உயிரைக் காக்க நடத்தப்பட்டால் அது உணர்வுப்பூர்வமானது அல்லவா?
அப்படியொரு திருவிழா கேரளாவில் நடந்துள்ளது. ப்ளட் டோனர்ஸ் கேரளா என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய இந்த பிரியாணி திருவிழாவில் கேரளாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 350 பேர் கலந்து கொண்டனர். இதில் 16,000 பிரியாணி பொட்டலங்கள் விற்கப்பட்டன.
இதன் மூலம் கிடைத்துள்ள பணத்தை வைத்து அஜோ (37) ரத்தப் புற்றுநோயாளி, அதுல் (20) நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர், பாபு சிறுநீரக நோயாளி ஆகியோருக்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செருவத்தேரி பகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் இந்த பிரியாணி சமைக்கப்பட்டு விறபனை செய்யப்பட்டது.
2200 கிலோ அரிசி, 4000 கிலோ கோழி, 2200 வெங்காயம் பயன்படுத்தப்பட்டது. 40 பெரிய தாமிரப் பாத்திரங்களில் சமைக்கப்பட்டது. கொம்பிடி பகுதியைச் சேர்ந்த தமம் கேட்டரிங் சர்வீஸின் ஃபெபின் இலவசமாக தன் குழுவினருடன் வந்து சமையல் வேலைகளைச் செய்தார்.
இந்த பிரியாணியை செய்வதற்காக பல்வேறு தரப்பினரும் பணம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் பிரியாணி சமைக்கப்பட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு ஆதரவற்றோருக்கு அளிக்கப்பட்டது.
அர்த்தமுள்ள பிரியாணி திருவிழா:
இந்த அர்த்தமுள்ள பிரியாணி திருவிழா இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் தான் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. பொதுவாகவே சமீப காலமாக கிரவுட் ஃபண்டிங் முறை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கீட்டோ.ஆர்க், மைலேப் போன்ற இணையதளங்கள் மருத்துவ உதவிக்காக கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டித் தருகின்றனர்.
அண்மையில் கூட நாமக்கல்லைச் சோ்ந்த 2 வயதாகும் சிறுமி கே.எஸ்.மித்ராவின் உயிரை காப்பதற்காக கடந்த ஒரு மாதமாக மொத்த தமிழ்நாடும் ஒன்று திரண்டு போராடி வந்தது. இணையம் முழுக்க பொது மக்களும், பிரபலங்களும் மித்ராவின் உயிரை காக்க நிதி திரட்டினர்.
மரபணு கோளாறான முதுகு தண்டுவட தசைநாா் சிதைவு சிகிச்சைக்கு தேவையான நிதி திரட்டப்பட்டது. இன்னும் சில இடங்களில் கல்வி பயில, ஏன் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூட கிரவுட் ஃபண்டிங் முறை உதவியாக இருக்கிறது.
இளம் இயக்குநர்கள் திரைப்படங்களைக் கூட கிரவுட் ஃபண்டிங் மூலம் திரட்டும் சூழல் இன்று உருவாகியுள்ளது. ஆனால், அதே வேளையில் இதனை யாரும் ஏமாற்றும் நோக்கில் பயன்படுத்திவிடக் கூடாது, இதனால் இந்த நல்ல திட்டமே நீர்த்துப் போய் விடக் கூடாது என்று சில சமூக ஆர்வலர்கள் அக்கறை தெரிவிக்கின்றனர்.