இன்று அதிகாலை தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள பாலத்தில் இருந்து நான்கு பேரை ஏற்றிச் சென்ற எஸ்யூவி கார் ஆற்றில் விழுந்துள்ளது. இதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அதிகாலை 1:10 மணியளவில் விபத்து நிகழ்ந்ததையடுத்து வாகனத்தையும் அதில் இருந்தவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இந்திய கடலோர காவல்படை, கடற்படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் மற்றும் கோவா காவல்துறையினர் ஈடுபட்டனர்.
மாநிலத் தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள கோர்டலிம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜுவாரி நதிப் பாலத்தில் சென்ற காரை எஸ்யூவி முந்திச் செல்ல முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் பாலத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதி ஆற்றில் விழுந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வாகனத்தில் குறைந்தது நான்கு பேர் இருந்ததாகவும், அதை ஒரு பெண் ஓட்டிச் சென்றதாகவும் விபத்தை நேரில் பார்த்த சாட்சி தகவல் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்த காவல்துறை அலுவலர், "கோவா போலீசார், கடலோர காவல்படை கப்பல், படகுகள், தீயணைப்பு மற்றும் அவசர சேவை பணியாளர்களுடன் சேர்ந்து வாகனத்தை கண்டுபிடிக்க பெரும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் இரவில் இருள் காரணமாக அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்திய கடற்படையின் டைவர்களும் இன்று காலை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் இணைந்தனர்" என்றார்.
இந்த பாலம் மார்கோ (தெற்கு கோவா) மற்றும் பனாஜி இடையே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்