குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருப்பது நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் விவாத பொருளாக மாற, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜக எம்பி ஒருவருடன் பேசுவதற்காக ஆளும் கட்சியினர் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்றார்.
அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலையிட்டபோது, சோனியா காந்தி தன்னுடன் பேச வேண்டாம் என அவரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன. சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்ட பிறகு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த இடைவேளையின்போதுதான் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. "சோனியா காந்தி மன்னிப்பு கேள்" என்று ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்ப, ஆளும் பாஜக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடியே கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய ஸ்மிருதி இரானி, "நீங்கள் திரௌபதி முர்முவை அவமானப்படுத்த அனுமதித்தீர்கள். மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருக்கும் பெண்ணை அவமானப்படுத்துவதற்கு சோனியா அனுமதி அளித்திருக்கிறார்" எனக் கூறியுள்ளார்.
பின்னர், மக்களவை சபாநாயகர் அவையை ஒத்திவைத்ததை அடுத்து, சோனியா காந்தி அவையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, கோஷம் எழுப்பிய பாஜக எம்பிக்களுடன் பேச அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்றார். அவருடன் இரண்டு காங்கிரஸ் எம்பிக்கள் சென்றனர்.
யாரும் எதிர்பாராத சூழலில், ஆளும் கட்சி அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று பாஜக எம்பி ரமா தேவியிடம், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுவிட்டார். நான் ஏன் இதில் இழுக்கப்படுகிறேன்?" என கேட்டுள்ளார்.
அப்போது, குறுக்கிட்ட ஸ்மிருதி இரானி, "மேடம், நான் உங்களுக்கு உதவலாமா? நான்தான் உங்களின் பெயரை குறிப்பிட்டேன்" எனக் கூறியுள்ளார். அதற்கு சோனியா காந்தி, "என்னுடன் பேச வேண்டாம்" என்று பதிலளித்தார்.
இப்படி பரபரப்பான சூழ்நிலையில், பாஜகவினர் அமளியில் ஈடுபட, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்ப தொடங்கினர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலேவும் சோனியா காந்தியை கூச்சலிட்ட பாஜக உறுப்பினர்களிடம் இருந்து இழுத்து சென்றனர். பின்னர், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிலைமையை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனிடையே, சோனியா காந்தியை ஸ்மிருதி இரானி தாக்கியதாக காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்