Attack On Manipur CM: மணிப்பூரில் முதலமைச்சர் பிரைன் சிங்கின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பின் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முதலமைச்சர் கன்வாய் மீது தாக்குதல்:


முதலமைச்சர் ஜிரிபாம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, பாதுகாப்பு படையினர் சென்றபோது இந்த தாக்குதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜிரிபாம் பகுதியை பார்வையிட, முதலமைச்சர் பிரைன் சிங் செவ்வாயன்று அங்கு செல்ல திட்டமிடப்பட்டு  இருந்தது குறிப்பிடத்தக்கது.









முதலமைச்சர் பிரைன் சிங் கண்டனம்:


தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசியுள்ள பிரைன் சிங், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் மீதான நேரடி தாக்குதல் என்பது, நேரடியாக மாநில மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளது என்று பொருள்படும். எனவே, மாநில அரசு ஏதாவது செய்ய வேண்டும். எனவே, நான் செய்வேன். எனது சகாக்கள் அனைவரையும் அழைத்து ஆலோசித்து ஒரு முடிவை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.


ஜிரிபாம் கலவரம்:


மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்று குக்கி இன மக்களிடையே, சுமார் ஒரு வருடமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பெரும் பொருட்சேதமும் ஏற்படுள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால்,  ஜிரிபாமில் இரண்டு போலீஸ் அவுட்போஸ்ட்கள், ஒரு வன பீட் அலுவலகம் மற்றும் குறைந்தது 70 வீடுகள் தீவைக்கப்பட்டன. இதில் நிகழ்ந்த பாதிப்புகளை பார்வையிடவே பிரைன் சிங் நாளை அப்பகுதிக்கு செல்லவிருந்தார்.


துப்பாக்கிச் சூடு:


அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்ற பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது, துப்பாக்கிகளை கொண்டு சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்ததாக பிடிஐ அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை-53ன் கோட்லென் கிராமத்தின் அருகே துப்பாக்கிச் சூடு தொடர்வதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.