நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று 3வது முறையாக பதவியேற்றார். அவருடன் இணைந்து மத்திய அமைச்சர்களும், மத்திய இணையமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர்.
பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து:
பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்ற உடனே அவர் பி.எம். கிஷன் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டார். பிரதமரின் கிஷன் நிதி திட்டம் என்பது மத்திய வேளாண்துறையின் கீழ் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவது ஆகும்.
இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு தவணையாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி தனது கையெழுத்தாக அந்த திட்டத்திற்கான 17 வது தவணை தொகையாக ரூபாய் 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
விவசாய திட்டத்திற்கு ஒதுக்கியது ஏன்?
மோடியின் கடந்த ஆட்சியில் பா.ஜ.க.வின் ஆட்சிக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடுமையான போராட்டம் நடத்தினர். ஆனாலும், அப்போது மோடி தலைமையிலான அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
விவசாயிகள் மரணம், விவசாயிகள் போராட்டம் போன்றவை வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, இந்த முறை பா.ஜ.க.வால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை என்றும் கருதப்படுகிறது. இந்த சூழலில், 3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தாங்கள் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதற்காக பி.எம்.கிஷன் நிதி திட்டத்திற்கு நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ.க., நடப்பு மக்களவைத் தேர்தலில் தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மேலும் படிக்க: BREAKING - Suresh Gopi: மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்.. அதிரடியாக அறிவித்த நடிகர் சுரேஷ் கோபி..! காரணம் என்ன..?
மேலும் படிக்க:Cabinet Ministers List: பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்ற 30 கேபினட் அமைச்சர்கள்! யாருக்கெல்லாம் இடம்? முழு லிஸ்ட் இதோ