மத்திய அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லை என்றும் எம்.பி.யாக மட்டுமே தொடர விருப்பம் என்றும் நடிகர் சுரேஷ் கோபி பேட்டியளித்திருந்தார். அது சர்ச்சையானதையடுத்து தற்போது அவர் வேறு விதமான கருத்தை தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, அமைச்சர் பதவி வேண்டாம் என தெரிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதில், கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபியும் ஒருவர். மக்களவை தேர்தலில் கேரளாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபியே ஆகும்.
ஆனால், பதவியேற்பு விழா முடிந்ததும் கேரளாவை சேர்ந்த தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ அமைச்சர் பதவி வேண்டாம் என முன்பே கூறினேன்.
ஆனால், பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை. நான் நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளேன். அந்த பணியையும் நான் செய்ய வேண்டும். எம்.பி.யாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம், நான் எதுவும் கேட்கவில்லை, எனக்கு இந்த பதவி வேண்டாம் என்றேன்.
விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து விடுபடுவேன் என நினைக்கிறேன். இதனால் திருச்சூர் வாக்காளர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அது அவர்களுக்கே தெரியும். ஒரு எம்.பி.யா நான் அவர்களுக்காக பணியாற்றுவேன். அதே நேரத்தில், நான் ஒப்புக்கொண்ட படங்களிலும் நடிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
கேரளாவின் முதல் பாஜக எம்பி:
நிறைய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருத்தது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து தற்போது விளக்கம் அளித்துள்ள சுரேஷ் கோபி, "மோடி அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன.
இது முற்றிலும் தவறானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சியில் உறுதி பூண்டுள்ளோம்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். முதலில் அமைச்சரவையில் தொடர விருப்பம் இல்லை என சொல்லவிட்டு தற்போது தவறான செய்திகள் பரப்பப்படுவதாக சுரேஷ் கோபி கூறுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளர் விஎஸ் சுனில்குமாரை விட 74, 686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சுரேஷ் கோபி வெற்றி பெற்ற திருச்சூர் தொகுதி கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்தது.
சுரேஷ் கோபி மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, மாநிலங்களவை எம்பியாக இருந்தார். கடந்த 2016ம் ஆண்டு மாநிலளவை உறுப்பினராக நேர்ந்தெடுக்கப்பட்டு, 2022ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
கடந்த 1958ம் ஆண்டு கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தார் சுரேஷ் கோபை. கொல்லத்தில் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்று, அதன்பின் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்த சுரேஷ் கோபி, பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
1998ம் ஆண்டு வெளியான காளியாட்டம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதுபோக, கேரளாவில் ஒளிபரப்பாகிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நீண்ட காலமான தொகுத்து வழங்கினார்.