குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில்தான், அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


பிடிப்பட்டவரகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளா? 


ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியமான நபருக்காக விமான நிலையத்தில் அவர்கள் காத்திருந்ததாகவும் அப்போது அவர்கள் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அந்த முக்கியமான நபர் வேலை ஒன்று தருவதாக இருந்ததாகவும் அவர்களின் போன்களில் இருந்து பல முக்கியமான மெஸேஜ்களை போலீசார் மீட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய சில ஆயுதங்களை அவர்களுக்கு தர பாகிஸ்தான் ஏஜெண்டுகள் உறுதியளித்திருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்பே அவர்கள் பிடிபட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வழியாக அவர்கள் அகமதாபாத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


குஜராத்தில் தொடர் பரபரப்பு:


கடந்த மே 12ஆம் தேதி, அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலைய வளாகத்தில் சோதனை செய்தனர். அதில், பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.


சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் விவரிக்கையில், "சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் விமான நிலையம் முழுவதையும் சோதனை செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அல்கொய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று பேரை ராஜ்கோட்டில் இருந்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.


வங்காளதேச தீவிரவாதியின் கட்டுப்பாட்டில் இவர்கள் இருந்ததாகவும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பதற்காக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.


நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், குஜராத்தில் தீவிரவாதிகள் பிடிப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ஆம் தேதி, மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது, குஜராத்தில் மக்களவை தேர்தல் நடந்தது. 


இதையும் படிக்க: Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!