கர்நாடகாவில் திரவ நைட்ரஜன் கலந்த உணவை (பான்) சாப்பிட்ட குழந்தையின் வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த மாதம் தமிழ்நாட்டில் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிடுவதால் சிறுவன் ஒருவன் வலியில் அலறி துடித்த வீடியோ ஒன்றை இயக்குநர் மோகன் ஜி பகிர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, இதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க உடனடியாக தமிழ்நாடு அரசும், உணவு பாதுகாப்பு துறையும் நைட்ரஜன் கலந்த உணவு விஷயத்தில் தடை, சிறை தண்டனை என  கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. 


இப்படியான நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நிகழ்ச்சி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த திரவ நைட்ரஜன் கலந்த பான் பீடா சாப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமிக்கு கடுமையாக வயிற்று வலி உண்டாகியுள்ளது. உடனடியாக பதறிப்போன குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 


அங்கு சிறுமியின் உடல் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் ரிப்போர்ட்டை மருத்துவர்கள் பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி உடலில்  4×5 செ.மீ., அளவில் துளை ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதற்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ்  என்று பெயர். இந்த துளையை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 6 நாட்கள் சிகிச்சைக்குப் பின் சிறுமி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைப் போல அங்கும் திரவ நைட்ரஜன் கலந்த உணவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திரவ நைட்ரஜன், உணவுகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது தவறாகக் கையாளப்பட்டாலோ, உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம்  குருகிராமில் ஒருவர் திரவ நைட்ரஜன் கலந்த மதுவை குடித்ததால் அவரது வயிற்றில் சுமார் 10 செ.மீ., அளவுக்கு துளை இருந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.